வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/08/2018)

கடைசி தொடர்பு:22:30 (18/08/2018)

காவிரியில் வெள்ளப்பெருக்கு; கல்லணைக்கு அருகிலேயே காய்ந்துகிடக்கும் கால்வாய்! - வேதனையில் விவசாயிகள்

தஞ்சாவூர் கல்லணையில் தினமும் இரண்டு லட்சம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடலில் கலக்கிறது. ஆனால், கல்லணைக்கு அருகில் உள்ள கட்டளைக் கால்வாய், உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் வராமல் வறண்டுகிடக்கிறது என கட்டளைக் கால்வாயில் இறங்கி தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் மற்றும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

கடந்த மாதம் வரை காவிரிக்கு தண்ணீர் வருமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் பெய்த கன மழையால் மேட்டூர் அணைக்குத் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இந்த ஆண்டு இரண்டு முறை அணை முழுக் கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதையடுத்து, டெல்டா மாவட்ட பாசனத்துக்காகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, பின்னர் கல்லணையிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில், தண்ணீர்வரத்து மேலும் அதிகரிக்க, கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வீணாகக் கடலில் கலந்தது. இதனால், கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் போராட்டம் நடத்திவந்தனர். தற்போது கல்லணைக்குத் தண்ணீர் அதிக அளவில் வருவதால், அதை கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடுகின்றனர். மேலும், தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும், பல கிராமங்களில் ஆற்று நீர் ஊருக்குள் புகுந்ததைத் தொடர்ந்து, மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

காய்ந்து கிடக்கும் கால்வாய்

'தூர் வாருவதில் முறைகேடு, அதிகாரிகளின் மெத்தனம் போன்றவற்றால் தண்ணீர் இப்படி  வீணாகிறது. பாசன வாய்க்கால்கள் காய்ந்து கிடக்கின்றன' என விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். தஞ்சாவூர் அருகே உள்ள பூதலூர் சானூரப்பட்டி ஆர்.சி.டிவிஷன் அலுவலகம் முன்பு, புதிய  கட்டளை மேட்டு வாய்க்காலில் இறங்கி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட ஜீவக்குமார் கூறுகையில், ``காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாகக்  கடலில் கலக்கிறது. ஆனால், புதிய கட்டளை மேட்டு வாய்க்கால், உய்யக்கொண்டான் பகுதிகளில் பாசனத்துக்குத் தண்ணீர் வராமல் காய்ந்துகிடக்கிறது. பொதுப்பணித்துறையின் நீர் மேலாண்மைக் குறைபாடும், தூர் வாரியதில் செய்யப்பட்ட முறைகேடும்தான் தண்ணீர் வராததற்குக் காரணம். கல்லணைக்கு அருகிலேயே இப்படிப்பட்ட நிலைமை இருக்கிறது என்பதுதான் வேதனை. பூதலூரைச் சுற்றி பல ஏரிகள் உள்ளன. வாய்கால்களில் தண்ணீர் விடாததால், அவை காய்ந்து கட்டாந்தரையாகக் கிடக்கின்றன. இதைக் கண்டித்து, கால்வாயில் இறங்கி விவசாயிகள், பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டோம்’’ என்றார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க