வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (18/08/2018)

கடைசி தொடர்பு:23:00 (18/08/2018)

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு சென்னையில் பா.ஜ.க-வினர் அஞ்சலி!

சென்னையில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில், மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலிசெலுத்தப்பட்டது. இதையடுத்து அமைதி ஊர்வலத்திலும் பா.ஜ.க-வினர் ஈடுபட்டனர்.

முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாய், கடந்த 6-ம் தேதி மாலை 5.05 மணி அளவில், உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரது உடல், டெல்லியில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இதில், பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், வாஜ்பாய்க்கு தமிழக பா.ஜ.க சார்பில் அஞ்சலிசெலுத்தும் வகையில், அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சென்னை தியாகராயநகரில் உள்ள, பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்திலிருந்து நடேசன் பூங்கா வரை கையில் பதாகைகளை ஏந்தியபடி பா.ஜ.க-வினர் அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர். 

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான பா.ஜ.க-வினர் கலந்துகொண்டனர். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தராஜன், `முன்னாள் பாரதப் பிரதமர் வாஜ்பாயின் மறைவுக்கு நேரடியாக இரங்கல் தெரிவித்த அனைத்து மாற்றுக் கட்சித் தலைவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தமிழகத்தின் மாற்றுக்கட்சித் தலைவர்கள் மற்றும் கமலாலயத்தில் மரியாதை செலுத்திய முத்தரசன், பாலகிருஷ்ணன், த.மா.கா சார்பில் அஞ்சலி செலுத்திய ஞானதேசிகன் ஆகியோருக்கு நன்றி.

தற்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய கேரளாவுக்கு, பிரதமர் முதல் கட்டமாக 500 கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறார். தினந்தோறும் உணவுப் பொருள்கள், மருந்துகள், தேவையான தண்ணீர் வசதிகள் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.சிறப்பு மருத்துவக் குழுவும் ஏற்பாடுசெய்கிறோம். இங்கிருந்து அனுப்பிய நிவாரணப் பொருள்களைக் கொடுப்பதற்கு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் தேவையான உதவிகளை கேரள அரசுக்கு பா.ஜ.க செய்யும்' என்று தெரிவித்தார்.