வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (19/08/2018)

கடைசி தொடர்பு:00:00 (19/08/2018)

“முல்லைப் பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து ஏற்படாது!” - வைகோ

வைகோ

“முறையாக திட்டமிட்டு தடுப்பணைகள் கட்டத் தவறியதாலும், வாய்க்கால்களை சரியாக தூர் வாரததாலும் தான் இவ்வளவு தண்ணீரும் விவசாயிகளுக்குப் பயனில்லாமல் வீணாய்ப் போயிருக்கிறது” என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைகோ பேசினார்.

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, ம.தி.மு.கவின் வெள்ளி விழா மற்றும் வைகோவின் பொதுவாழ்வினுடைய பொன்விழா ஆகிய மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழா மாநில மாநாடு வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது. மாநாடு தொடர்பாக தொண்டர்களின் ஆலோசணைக் கூட்டம் ஈரோடு - பெருந்துறை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 
இந்த நிகழ்ச்சியின் போது பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசிய வைகோ, “23 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் ம.தி.மு.க மாநில மாநாடு, முப்பெரும் விழாவாக அடுத்த மாதம் ஈரோட்டில் நடைபெறவிருக்கிறது. இந்திய அரசியலின் முக்கியமான காலக்கட்டத்தில், மிக முக்கியமான தருணத்தில் இந்த மாநாடு வெற்றிகரமாக நடைபெற இருக்கிறது. அதற்காக தொண்டர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “முறையாகத் திட்டமிட்டு தடுப்பணை கட்ட தவறியதாலும், வாய்க்கால்களை மழைக்காலத்திற்கு சரியாக தூர்வாரதால் கிடைத்த நீர் எல்லாம் வீணாய்ப் போயிருக்கிறது. முன்னதாகவே இதனையெல்லாம் சரி செய்திருந்தால் இந்நேரம் அந்த நீர் பயனுள்ளதாக இருந்திருக்கும். காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எங்கும் தண்ணீராக இருக்கிறது. ஆனால், குடிப்பதற்கு குடிநீர் இல்லை. கடைமடை பகுதிக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் பாசனம் செய்ய முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. முல்லைப் பெரியாறு அணையப் பொறுத்தவரை 152 அடிக்கு தண்ணீர் உயர்ந்தாலும், அணை பாதுகாப்பாக இருக்கும் என்பது அறிஞர்களின் கருத்து. எனவே, அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டிய அவசியமில்லை. இதனால், கேரளாவிற்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவில், ஆளுநர் மாளிகையில் நீதிபதிகளுக்கு உரிம மரியாதை கொடுக்கப்படவில்லை. இது ஆளுநர் மாளிகையின் தவறான அணுகுமுறை” என்றார்.