கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!- ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் பொதுமக்கள் | Flood In Kollidam River People who take Selfie without knowing the danger

வெளியிடப்பட்ட நேரம்: 01:00 (19/08/2018)

கடைசி தொடர்பு:01:00 (19/08/2018)

கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்!- ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுக்கும் பொதுமக்கள்

கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழைக்காரணமாக மேட்டூர் அணை இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையிலும் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

காவிரி

இதனைத்தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடத்தின் இரு கரைகளையும் தொட்டவாறு கரைபுரண்டு தண்ணீர் செல்கிறது. சிதம்பரம் அருகே நாகை மாவட்டம்- கடலூர் மாவட்டத்தை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே வாகன போக்குவரத்து பாலம் மற்றும் ரயில்வே பாலங்களின் மேல் பகுதி கட்டைகளை தொடும் அளவிற்கு வெள்ள நீர் செல்கிறது. கடந்த 2005ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து இந்த அளவிற்கு வெள்ள நீர் செல்கிறது. சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து கும்பல், கும்பலாக கொள்ளிடம் பாலத்தில் இருந்து கரைபுரண்டு ஓடும் வெள்ள நீரை பார்த்தும், குடும்பத்துடன் செல்பி எடுத்து செல்கின்றனர். 

வேளக்குடி, வல்லம்படுகை, கண்டியாமேடு  உட்பட 10க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. சிதம்பரம் அருகே அக்கரை ஜெங்கொண்டபட்டினம், திருகாட்டூர், கீழ்குண்டலபாடி ஆகிய கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து தீவுகள் போல் காட்சியளிக்கிறது. மாவட்ட நிர்வாகம் இந்த கிராம மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும் என அறிவுருத்தியும், இந்த கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளி வர மறுத்து கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம் மற்றும் வீட்டின் மாடியில் தங்கி உள்ளனர்.

வருவாய்த்துறை

இவர்களுக்கு வருவாய்த்துறையினர் படகு மூலம் உணவு அனுப்பி வருகின்றனர். கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு சுமார் 2 லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் கரையோர கிராமங்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.