வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (19/08/2018)

கடைசி தொடர்பு:13:07 (19/08/2018)

குப்பை மேடான முகப்பு.. தேங்கும் மழைநீர்.. முகம் சுளிக்க வைக்கும் ஊட்டி மத்திய பேருந்து நிலையம்

குப்பை மேடான முகப்பு.. தேங்கும் மழைநீர்.. முகம் சுளிக்க வைக்கும் ஊட்டி மத்திய பேருந்து நிலையம்

மிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தளமான ஊட்டியைக் காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நித்தமும் அங்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். தற்போது சீஸன் இல்லாவிட்டாலும் ஊட்டிக்காக பிரத்யேக ரசிகர்கள் இன்றும் படையெடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கு வரும் ஏராளமான சுற்றுலா வாசிகளை முதலில் வரவேற்பது ஊட்டியின் பேருந்து நிலையம். ஆனால், தற்போது பேருந்து நிலையத்திற்குள் புதிதாக நுழைபவர்கள் ஸ்தம்பித்து நிற்கிறார்கள். நுழைவு வாயிலிலேயே சகித்துக்கொண்டு நடந்துசெல்லும் நிலைதான் தற்போது இருக்கிறது. 

ஊட்டி பேருந்து நிலையம், பிரிட்டிஷ் காலத்துக்கு முன்பாகவே காணப்பட்ட ஒத்தைக்கல் மண்டபம் அருகே அமைந்திருக்கிறது. உதகமண்டலம் எனும் ஊட்டியில் மொத்தம் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளது. மத்திய பேருந்து நிலையம், உள்ளூர் பேருந்து நிலையம் மற்றும் காந்தள் பேருந்து நிலையம். மத்திய பேருந்து நிலையம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. மக்கள் தொகை பெருகப் பெருக, அந்த மலை வாசஸ்தலம் அதிகப்படியான ப்ளாஸ்டிக் உபயோகத்திற்குள் சென்று தன் இயற்கை முகத்தை இழக்கத் தொடங்கியது.  

ஊட்டி பேருந்து நிலையம்

அந்த பேருந்து நிலையத்தில் மொத்தம் 10 ப்ளாட்பார்ம்கள் உள்ளன. காத்திருக்கும் பயணிகள் அமர்வதற்குக் குறைந்த இருக்கைகள் மட்டுமே காணப்படுகின்றன. 2008ல் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றில் பேருந்து நிலையம் அழகாகத் தென்படுவதை பார்க்கமுடிகிறது. தற்போதைய நிலையில் முறையான தொடர் பராமரிப்பின்றி பேருந்து நிலையமே கவலைக்கிடமாக இருக்கிறது.

உதகமண்டலத்திலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய இடங்களுக்கு TNSTC பேருந்துகளும், திருச்சி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், சென்னை ஆகிய இடங்களுக்கு SETC பேருந்துகளும் மற்றும் கேரளா, கர்நாடகாவிற்கு KSRTC பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு இடங்களிலிருந்து வந்து போகும் மக்களுக்குப் பராமரிப்பின்றி காணப்படும் பேருந்து நிலையத்தைப் பார்க்கும்போது சங்கடத்துடனே நகர்ந்து செல்கின்றனர்.

ஊட்டி பேருந்து நிலையம்

பேருந்து நிலையத்தின் முகப்பு பகுதியும், பேருந்துகள் இயக்கப்படும் தளமும், பேருந்துகள் நிற்கும் பகுதிகளும் அலங்கோலமாகக் காணப்படுகிறது. மழை பெய்யும் நாட்களில் பேருந்து நிலையத்தின் நிலையைச் சொல்லவே தேவையில்லை, குண்டும் குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி சிறுசிறு குளம், குட்டைகள் போல காட்சியளிக்கிறது. பயணிகள் காத்திருக்கும் இடத்தில் 20 இருக்கைகள் மட்டுமே இருக்கிறது. சில இருக்கைகள் பழுதடைந்துள்ளது. கனமழைப் பெய்யும் சமயங்களில் பயணிகள் காத்திருப்பு இடங்களுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. மேலும், கூடலூர் செல்லும் பேருந்துக்கு காத்திருக்கும் பயணிகள், கட்டண கழிப்பிடம் முன் சிறிது வலப்பக்கம் தள்ளி நின்றிருப்பார்கள். அங்கு அமர இருக்கைகள் இல்லாத நிலையில் முதியவர்கள் கழிப்பிடத்தின் அருகிலேயே அமர்ந்து விடுகிறார்கள்.

ஊட்டி

பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே உதகை ஏரிக்குச் செல்லும் சிற்றாறு ஒன்று இருக்கிறது. சுருக்கமாக 'உதகையின் கூவம்' என்று கூட சொல்லலாம். ஒரு காலத்தில் தூய நீரொட்டத்துடன் இருந்து, தற்போது சென்னையின் மொத்தக் கழிவுகளை சுமந்து செல்லும் கூவம் ஆறு போலவே, இந்த ஆற்றில், உதகையின் மொத்தக் கழிவுகளும், குப்பைகளும் ஒன்றாகக் கலக்கிறது. இது உதகையின் பழைய எழில்கொஞ்சும் சுற்றுச்சூழலை முற்றிலும் கேள்விக்குறியாக்கி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் அவதிப்படும் மக்களிடம் கேட்டபோது, "பேருந்து நிலையத்தில் மழை நீர் சேகரிப்பு ஒன்று அமைத்தால் நன்றாக இருக்கும். மக்கள் தொகையின் காரணமாக இந்த நிலைக்குப் பேருந்து நிலையம் மாறிவிட்டது. மேலும், பேருந்து ஒடுதளத்தை சிறிது மேடாக அமைத்தால் தண்ணீர் தேங்காது. பல இடங்களை இந்த பேருந்து நிலையத்தில் மேம்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள்தான் எடுக்கவேண்டும்" என்றும் கூறுகிறார்கள்.

மழை பெய்யும் சமயங்களில் பேருந்து நிலையம் மிக மோசமாகக் காணப்படுகிறது. மக்களும் சகித்துக்கொண்டு பழகிவிட்டனர். பேருந்து நிலையத்தின் இந்த நிலையை உதகை நகராட்சி மாற்றுமா? மாற்றத்திற்காக காத்திருக்கும் மக்களுக்கு மாற்றம் உண்டாகுமா? காத்திருப்போம்!


டிரெண்டிங் @ விகடன்