''ஊரு விட்டு ஊரு போகும் ஆறுமுகச்சாமி ஆணையம்..!'' ஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழுமா?

''ஊரு விட்டு ஊரு போகும் ஆறுமுகச்சாமி ஆணையம்..!''  ஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழுமா?

அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் கழித்து, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவருக்கு லண்டனில் இருந்து வந்த மருத்துவர் ரிச்சர்ட் பெய்ல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள், சிங்கப்பூர் மருத்துவர்கள் என்று 25-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக அப்போலோ நிர்வாகம் சொன்னது. அவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு நிறுத்தப்பட்டு வருகிறார்கள். 

ஜெயலலிதா, அப்போலோ ரிச்ச்ர்ட்

முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியில் தர்மயுத்தத்தைத் தொடங்கி, இந்த விசாரணை ஆணையத்தை அமைக்க வித்திட்டார். அதையடுத்து, 2017-ம் ஆண்டு செம்டம்பர் 25-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய உறவினர்களான டி.டி.வி.தினகரன், கிருஷ்ணப்பிரியா, விவேக் என்று ஒட்டுமொத்த சசிகலா குடும்பத்தினருக்கும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி, அவர்களிடம் இருந்து பதில் பெற்றுள்ளது. இவர்களில் பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா நேரில் ஆஜராகாமல் பிரமாணப்  பத்திரம் மூலம் தன்னுடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன், போயஸ் தோட்டம் சமையலர் ராஜம்மாள் ஆகியோரையும் நேரில் அழைத்து ஆணையம் விசாரித்துள்ளது.

அப்போலோ மருத்துவர்கள், செவிலியர்கள் என்று ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அவருடைய வீட்டுடன் தொடர்புடைய அனைவரிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. ஆணையத்தின் வழக்கறிஞர்களும் தங்களின் சந்தேகங்களைக் கிளப்பி பதில் பெற்றுள்ளார்கள். இந்த நிலையில், ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவனை மருத்துவர்களும், ஆணையத்துக்கு வந்து சாட்சியம் அளித்துள்ளார்கள். முன்னாள் காவல்துறை அதிகாரி ஜார்ஜ், காவல்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி, ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள் சாமி, வீரபெருமாள் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இவர்களிடம் வாக்குமூலம் மற்றும் குறுக்கு விசாரணை செய்யவுமே ஆணையத்துக்கு 11 மாதங்கள் ஆகிவிட்டன. 

எய்ம்ஸ் மருத்துவமனை டெல்லி

இதற்கிடையே டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் கில்னானி, அஞ்சன்டிரிகோ, நிதிஷ் நாயக் ஆகியோர், ஆறுமுகசாமி ஆணையத்தின் முன், வரும் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கடந்த வாரம் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களின் சாட்சியம் முடிந்ததும், ஏற்கெனவே ஆணையத்தில் சாட்சியம் அளித்துள்ளவர்களிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியது இருக்கிறது. இந்த நிலையில், சிங்கப்பூர் மவுன்ட் எலிசெபெத் மருத்துவமனை மருத்துவர்கள், இங்கிலாந்து மருத்துவர் ரிச்சர்ட் பெய்ல் மற்றும் மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை வந்து பார்த்த குறிப்பிட்ட அரசியல் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் என ஆணையத்தின் 'விசாரணைப் பட்டியல்' நீண்டு கொண்டே செல்கிறது.

ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 25-ம் தேதியுடன் ஒரு வருடம் நிறைவடைய உள்ளது. ஆனால், ஆணையத்தின் அறிக்கை என்னவோ, இப்போதைக்கு வெளியாகும் என்று தெரியவில்லை. விசாரணை நடத்தியவர்களின் பட்டியலைக் கேட்டாலே, நமக்கு இப்போதே கண்ணைக் கட்டுகிறது...!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!