வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (19/08/2018)

கடைசி தொடர்பு:15:30 (19/08/2018)

கேரள வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக அக்னி தீர்த்த கடலில் மலரஞ்சலி!

மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த கேரள மக்களுக்கு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில்  யாத்திரை பணியாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.

மலரஞ்சலி


கேரளாவில் கடந்த 8-ம் தேதி துவங்கிய தென்மேற்கு பருவ மழையினால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பிய நிலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடை விடாது பெய்த மழையினாலும், வெள்ளப் பெருக்கினாலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை இந்த கொட்டும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 357 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து கேரள மாநிலத்தில் நிகழ்ந்த இந்த கோர நிகழ்வுகளில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ராமேஸ்வரத்தில் உள்ள அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் யாத்திரை பணியாளர்களும், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த புரோகிதர் சங்கத்தை சேர்ந்தவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர். இதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் நிவாரண உதவிகள் வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.