`தமிழக அரசு உள்நோக்கத்துடன் செயல்படுகிறது' - தஞ்சை மாவட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு!

தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள கட்டளை மேட்டுவாய்க்கால், உய்யக்கொண்டான் வாய்க்கால் ஆகியவைகளை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனத்திற்கு காத்திருக்கின்றன.

ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் நிலையிலும் கூட ஏன் இந்த வாய்க்கால்களில் தண்ணீர் திறக்கவில்லை என விவசாயிகளுக்கான சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ஜீவக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். ``டெல்டா மாவட்டங்கள் அனைத்திலும் இதே அவலநிலை நீடிக்கிறது. விவசாயிகளை வெளியேற்றிவிட்டு, பெட்ரோல்--கேஸ் நிறுவனங்களிடம் விளைநிலங்களை ஒப்படைக்க ஆட்சியாளர்கள் சதி செய்வதாகவும்'' குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் காரணத்திற்காக தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே சானுரப்பட்டியில் அமைந்துள்ள கட்டளை மேட்டுவாய்க்காலுக்குள் அமர்ந்து விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய வழக்கறிஞர் ஜீவக்குமார் ‘’காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுது. ஆனால் தமிழக அரசுக்கு என்ன உள்நோக்கமோ தெரியலை. இங்கவுள்ள கட்டளை மேட்டுவாய்க்கால், உய்யகொண்டான் வாய்க்கால்கள்ல தண்ணீர் திறக்காமலே இருக்காங்க. இந்த வாய்க்கால்கள் தண்ணீர் வந்தால் இங்குவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி, 15 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாசன வசதிப்பெறும். முன்னாடியெல்லாம் உய்யகொண்டான் வாய்க்கால்ல மே மாதம் தவிர மற்ற எல்லா மாதங்கள்லயும் தண்ணீர் ஓடிக்கிட்டு இருந்துச்சு.

வெள்ளையர்கள் ஆட்சிகாலத்துல தஞ்சாவூர் கலெக்டராக இருந்த குரோம் என்பவர் 1038-ம் ஆண்டு இதை ஒரு உத்தரவாகவே பிறப்பிச்சிருக்கார். இந்த வாய்க்கால்கள் சோழ மன்னர்கள் ஆட்சிகாலத்துல உருவாக்கப்பட்டது. வரலாற்று புகழ்மிக்க இந்த வாய்க்கால்கள் இப்ப வெறும் கட்டாந்தரையாக கிடக்குது. தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் விவசாயத்தை வெளியேறிவிட்டால், பெட்ரோல் - கேஸ் நிறுவனங்களுக்கு இங்கவுள்ள விவசாய நிலங்களை கொடுக்கலாம்னு தமிழக அரசு சதி செய்வதாக விவசாயிகள் சந்தேகிக்கிறோம்” என கொந்தளிப்புடன் பேசினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!