வெளியிடப்பட்ட நேரம்: 16:54 (19/08/2018)

கடைசி தொடர்பு:16:54 (19/08/2018)

''விக்கிரமராஜா, தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல மறுப்பது ஏன்?'' - வெள்ளையன் கேள்வி

''விக்கிரமராஜா, தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல மறுப்பது ஏன்?'' - வெள்ளையன் கேள்வி

நெல்லை - தூத்துக்குடி நாடார் சங்கம் ஊழல் குற்றச்சாட்டுகளால் கிறுகிறுத்து நிற்கிறது. வணிகர் சங்கப் பேரமைப்புகளின் தலைவரான விக்கிரமராஜா, கொட்டிவாக்கத்தில் உள்ள 'நெல்லை நாடார் மெட்ரிக் பள்ளி' தாளாளராக இருந்தபோது, 13 கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக சங்க நிர்வாகிகள் போலீஸில் புகார் செய்தனர். 

இதையடுத்து, சங்க நிர்வாகிகள் மீது 500 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை சுமத்தினார் விக்கிரமராஜா. இந்தப் புகாரின்போது, 'வணிகர் சங்கப் பேரவையின் தலைவராக உள்ள வெள்ளையன் தூண்டுதலின்பேரில்தான் என் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இது உள்நோக்கம் கொண்டது' என்று விக்கிரமராஜா கருத்து தெரிவித்தார். இதுசம்பந்தமான செய்திகள் வலைதளங்களிலும் பரவ ஆரம்பித்தன.
இதையடுத்து, கொதித்தெழுந்த வெள்ளையன் தரப்பினர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், 'விக்கிரமராஜா தரப்பினர் தேவையில்லாமல் என் மீது அவதூறு பரப்புகின்றனர். இதனைத் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று புகார் மனு அளித்தனர். இந்நிலையில், வெள்ளையனிடம் பேசினோம்....

''அனைத்து சமுதாய மக்களுக்குமான வணிகர் சங்கப் பேரவைத் தலைவராக இருப்பவன் நான். அதனால், நாடார் சங்கப் பிரச்னைகளில் நான் தலையிடுவதே கிடையாது. அப்படியிருக்கும்போது தேவையே இல்லாமல், என் மீது வீண் பழி சுமத்தி இணையதளங்கள் வழியாக பாண்டியராஜன் என்பவர் பிரசாரம் செய்துவருவது எனது கவனத்துக்கும் வந்தது.  

விக்கிரமராஜா, நாடார் சங்கப் பணம் 13 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துவிட்டார் என்றப் புகார் எழுந்தபிறகுதான், என்மீது இப்படியொரு பழியை சுமத்தி விக்கிரமராஜா தரப்பினர் செய்தி பரப்பிவருகிறார்கள். 

விக்கிரமராஜா குறித்து வெள்ளையன்

பொதுவாக துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதுபோல், இதுபோன்ற விஷயங்களில் நான் தலையிடாமல் ஒதுங்கிப் போய்விடுவதுண்டு. ஆனால், வணிகர் சங்கத்தைச் சேர்ந்த தென்சென்னை மாவட்டத் தலைவர், என் மீது இப்படித் திட்டமிட்டு அவதூறு செய்தி பரப்பப்படுவதைக் கண்டு பொறுக்கமுடியாமல், போலீஸில் புகார் கொடுத்துவிட்டார்.

நாடார் சங்கத்தில் விக்கிரமராஜா ஊழல் செய்துவிட்டதாக, சங்கத் தலைவர் பத்மநாபன் ஆதாரப்பூர்வமான புகார் கொடுத்திருக்கிறார். அதாவது, கட்டிட வேலைகளுக்கு 400 லோடு மண் அடித்ததாக விக்கிரமராஜா தரப்பினர் கொடுத்திருக்கும் பில்களில், ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர் பதிவு எண்களையெல்லாம் லாரிகளின் பதிவு எண்களாகக் காட்டி கணக்கு கொடுத்திருக்கிறார்களாம். 
நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான்...

ஆதாரபூர்வமான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு நேரடிப் பதிலாக தன் தரப்பு நியாயத்தை எடுத்துவைக்காமல், 'வெள்ளையன் தம்பி பத்மநாபன்; அண்ணன் தூண்டுதலின்பேரில்தான் என் மீது புகார் கொடுக்கிறார்' என்றெல்லாம் விக்கிரமராஜா சுத்திவளைத்துப் பேசவேண்டிய அவசியம் என்ன?'' என்றக் கேள்வியை முன்வைத்தார்.

இதற்குப் பதில் கேட்டு விக்கிரமராஜாவைத் தொடர்புகொண்டோம்... ''வெள்ளையனின் தம்பிதானே பத்மநாபன்....? அதைத்தானே நானும் சொன்னேன். என் அண்ணன் பெயர் விஜயராஜா. இப்போதும் நான் ஊருக்குப் போனால், 'விஜயராஜா தம்பி விக்கிரமராஜா' என்றுதான் சொல்வார்கள். எனக்கு ஒரு பிரச்னை என்றால், என் தம்பி என்னை விட்டுவிட்டுப் போய்விடுவானா என்ன....? அதுபோல்தான் வெள்ளையனும் பத்மநாபனும் ஒருவருக்கொருவர் கூட்டு சேர்ந்துகொண்டு என் மீது ஊழல் குற்றம் சுமத்துகிறார்கள்.

'நான் 13 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாகவும் அதனை ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடித்து பத்மநாபன் புகார் செய்திருக்கிறார்' என்றும் வெள்ளையன் சொல்வதிலிருந்தே இந்த விவகாரத்தைத் தூண்டிவிடுவதே வெள்ளையன் தான் என்பது தெரியவில்லையா? சம்பந்தமே இல்லையென்றால், ஊழல் புகாருக்கான ஆதாரங்கள் இருக்கின்றன என்று இவர் எப்படிச் சொல்லமுடியும்?'' என்றார் சிரித்தவாறு.

சீக்கிரமா விசாரணையை ஆரம்பித்து உண்மையை வெளிக்கொணருங்கள் நியாயமாரே....!


டிரெண்டிங் @ விகடன்