வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (19/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (19/08/2018)

`பேனாவுக்கும் பேப்பருக்கும் இடையேயான உலகம்தான் கலைஞரின் வாழ்க்கை!’ - மதுரையில் இலக்கிய ஆளுமைகள் புகழஞ்சலி

"பேனாவுக்கும் பேப்பருக்கும் இடையிலான உலகம்தான் கலைஞரின் வாழ்க்கை" என்று இலக்கிய அஞ்சலி செலுத்தினார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் 5 மாநகரங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சியை அந்தக் கட்சி நடத்தி வருகிறது.

கூட்டத்தில் ஸ்டாலின் உள்ளிட்டோர்

திருச்சியில் ஊடகவியலாளர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, இன்று மதுரையில் இலக்கிய ஆளுமைகளின் சார்பாக 'கலைஞரின் புகழுக்கு வணக்கம்' என்ற தலைப்பில் ராஜா முத்தையா மன்றத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.  இலக்கியவாதிகள் சா.கந்தசாமி, கலாப்ரியா,வாஸந்தி, சு.வெங்கடேசன், மு.மேத்தா, அறிவுமதி, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய், இமயம், ஹாஜாகனி ஆகியோர் இலக்கிய வழியில் புகழஞ்சலி செலுத்தினார்கள். 

இதில் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு, கனிமொழி,  உதயநிதி, தயாநிதி, அரவிந்தன், துரைமுருகன் உட்பட  தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். ஹாஜாகனி பேசும்போது, "சிறு வயதில் பள்ளியில் சேர்க்க மறுத்த தலைமை ஆசிரியரிடம், எதிரில் உள்ள கமாலலய குளத்தில் குதித்து உயிரை மாய்த்து கொள்வேன் என்று போராட்டத்தை தொடங்கியவர். கமலாலயத்தில் குதித்தால் காலியாகிவிடுவோம் என்ற சிந்தனை அப்போதே அவருக்கு தெரிந்திருக்கிறது" என்றார்.

சு.வெங்கடேசன் பேசும்போது,"கலைஞர் இறந்த அன்று, அவர் உடலுக்கு அருகில் பேனாவை வைத்தார் ஆதித்யன். மறுநாள்,யாரோ பெயர் தெரியாத தொண்டர் ஒருவர் சமாதி அருகே மூன்று பேப்பரை வாங்கி வைத்து சென்றிருக்கிறார். பேனாவுக்கும் பேப்பருக்கும் இடையில் இடைப்பட்ட உலகம்தான் கலைஞரின் வாழ்க்கை" என்று இலக்கிய அஞ்சலி செலுத்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க