`ஊரைச் சுற்றித் தண்ணீர்; குடிக்கத்தான் தண்ணீர் இல்லை!’ - வெள்ளம் சூழ்ந்த கிராம மக்கள் வேதனை

கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு செல்லும் வெள்ளத்தால் கடந்த 5 நாள்களாக சிதம்பரம் அருகே உள்ள அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர், கீழகுண்டபாடி ஆகிய 3 கிராமங்கள் தண்ணீரால் சூழப்பட்டு தனித் தீவாக மாறியுள்ளது. இந்த கிராமங்கள்  கொள்ளிடம், பழைய கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் இடையே அமைந்துள்ளதால் இருபுறமும் தண்ணீரால் நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த 3 கிராமங்களில் வசிக்கும் சுமார்  900 குடும்பங்கள் இடுப்பளவு தண்ணீரில் மாடிகளிலும், மேடான பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

வெள்ளத்தில் மக்கள்

விவசாயம் மற்றும் விவசாயக் கூலி தொழிலாளர்களான இந்த கிராம மக்கள், தங்கள் வீடுகளில் ஆடு, மாடு, கோழி என கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். கடந்த 5 நாள்களுக்கு முன்பு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டபோதே அதிகாரிகள் இவர்களை படகு மூலம் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தநிலையில், கிராம மக்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளைத் தனியாக விட்டு, விட்டு வரமாட்டோம் எனக் கூறி வெள்ளம் சூழ்ந்த கிராமத்திலேயே வசித்து வருகின்றனர்.

வெள்ளம்

அவர்களுக்கு வருவாய்த்துறையினர் படகு மூலம் உணவு, குடி நீர் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர். ஆனால், கடந்த 3 நாள்களாக கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 2 லட்சம் கன அடி தண்ணீர் செல்வதால் படகில் சென்று உணவு, குடிநீர் வழங்குவதும் சிரமாக உள்ளது. இதனால், இவர்கள் சரியாக உணவு, குடி நீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

நிவாரண உதவி

இதுகுறித்து அக்கரைஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தை சேர்ந்த ரகுநாதனிடம் பேசினோம். ``எங்கள் ஊரை சுற்றி வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது. ஆனா குடிக்கத் தண்ணீர் இல்லை. அரசு அதிகாரிகள் உணவு தருகிறார்கள். ஆனால், நேரத்திற்கு வரவில்லை. இளைஞர்களாகிய நாங்கள், நல்ல உள்ளங்களின் உதவியைப்பெற்று எங்களால் ஆன உதவியை கிராம மக்களுக்குச் செய்து வருகிறோம். மின்சாரம் இல்லை, ஊரில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்திருதாலும் எங்களின் வாழ்வாதரமாகிய ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை அநாதையாக இங்கு விட்டுவிட்டு நாங்கள் மட்டும் பாதுகாப்பாக வெளியேற மனமில்லாமல் வீட்டின் மாடிகளிலும், மேடான பகுதியிலும் கிடைக்கும் உணவை சாப்பிட்டு வாழ்ந்து வருகிறோம்’’ என்றார் வேதனையுடன். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!