வெளியிடப்பட்ட நேரம்: 01:15 (20/08/2018)

கடைசி தொடர்பு:07:39 (20/08/2018)

``மழை நீரை தேக்க விரைவில் அதிகளவில் தடுப்பணைகள் கட்டப்படும்!” - முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகவல்

எடப்பாடி பழனிசாமி

கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் மேட்டூர் அணை மற்றும் பவானி சாகர் அணைக்கு தொடர்ந்து அதிகளவில் நீர்வரத்து இருக்கிறது. மேட்டூர் அணையிலிருந்தும், பவானி சாகர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீரால் பவானி மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அந்த வகையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமி

ஈரோடு மாவட்டம், பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``பவானி மற்றும் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுமார் 50 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 67 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 7,832 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆயிரம் வீடுகள் தண்ணீர் புகுந்ததால் பாதிப்படைந்திருக்கின்றன. 609.69 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

தொடர்ந்து பேசியவர், ``வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிரந்தரமான வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை அரசு பரிசீலித்து பாதுகாப்பான இடத்தில், நிரந்தர அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெள்ளநீர் முழுமையாக வடிந்த பிறகு நேரடியாக கிராமங்களுக்குச் சென்று, பயிர் சேதம் கணக்கிடப்பட்டு, இழப்புக்குத் தகுந்தவாறு பயிர் இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும். குடிமராமத்துப் பணியைப் பொறுத்தவரை, ஏற்கெனவே 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 1,519 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 1,511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக 328 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.

எடப்பாடி பழனிசாமி

தொடர்ந்தவர், ``காவிரி நதிநீரைப் பொறுத்தவரை, நம்முடைய நிலப்பகுதி சமவெளிப் பரப்பாக இருக்கின்ற காரணத்தால் தடுப்பணை கட்டமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றில், ஆதனூர் குமாரமங்களம் என்ற இடத்தில் அம்மா இருந்தபோதே 400 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு அந்தப் பணிகள் துவங்கப்பட்டிருக்கின்றன. அங்கே, சில பட்டாதாரர்களிடம் பேசி, ஒருமித்த கருத்து ஏற்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் விரைவாக அந்தப் பணிகள் துவங்கும். இப்படி தமிழ்நாடு முழுவதும், பருவகாலங்களில் பொழிகின்ற மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க வேண்டுமென்பதற்காக ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்களைக் கொண்ட ஒரு குழு மூன்று மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு, அந்தக் குழு தமிழ்நாடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டிருக்கிறது. அதுசம்பந்தமான ஆய்வறிக்கையை இன்னும் ஒருசில மாதங்களில் அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறார்கள். அதன்பிறகு தேவையான இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டு மழைநீர் முழுவதும் தேக்கி வைக்கப்படும்” என்றார்.

‘பவானி ஆற்றில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படாததால்தான் அதிகளவில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறதே?’ என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், “வெள்ளப் பெருக்கால்தான் பவானி பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஆகாயத் தாமரையால் அல்ல. பவானி ஆற்றில் இருந்த ஆகாயத் தாமரைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டன” என்று கூறினார். 

எடப்பாடி பழனிசாமி

ஆய்வுக்குப் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈரோடு அரசு விருந்தினர் மாளிகையில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு பேசினர்.