வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (20/08/2018)

கடைசி தொடர்பு:07:54 (20/08/2018)

4 வருடமாக சேமித்த பணத்தைக் கேரள நிவாரண நிதிக்குக் கொடுத்த சிறுமி! - சர்ப்ரைஸ் கொடுத்த சைக்கிள் நிறுவனம்

கேரளாவில்  பெரும் மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனது சேமிப்பை வழங்கிய தமிழக சிறுமிக்குத் தனியார் சைக்கிள் நிறுவனம் சர்ப்ரைஸ் அளித்துள்ளது. 

கேரள மழை

கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப்  பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் வெள்ளத்திலும், நிலச்சரிவிலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று முதல் மழையின் தாக்கம் குறைந்துள்ளதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். கேரளாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா மட்டுமல்லாது உலகின் பல பகுதிகளிலும் இருந்து மக்கள் உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர். அரபு நாடுகளும், இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில அரசுகளும் கேரளாவுக்கு உதவிகளைச் செய்து வருகின்றனர்

சிறுமிக்கு சைக்கிள் வழங்குவதாக அறிவித்த நிறுவனம்

பொதுமக்களும் தங்களால் முடிந்த அளவுக்கு பல்வேறு உதவிகளைச் செய்துவருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற சிறுமி, கடந்த 4 ஆண்டுகளாகச் சைக்கிள் வாங்குவதற்காகத் தனது உண்டியலில் சேமித்து வந்த 9,000 ரூபாயைக் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளார். இந்தத் தகவல் செய்தியாக வர, அதை ஒருவர் சமூகவலைதளமான ட்விட்டரில் ஷேர் செய்தார். சிறுமியின் செயலைப் பாராட்டி பலரும் இதைப் பகிர, தனியார் சைக்கிள் நிறுவனமாக ஹீரோ சைக்கிள் நிறுவனத்துக்கும் இந்தத் தகவல் சென்றுள்ளது. சிறுமியின் செயலில் நெகிழ்ந்த அந்நிறுவனம், சிறுமி அனுப்பிரியாவுக்கு புதிய சைக்கிள் ஒன்றை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இதற்கு சமூகவலைதளத்தில் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.