`காவிரியில் 2.30 லட்சம் கன அடி தண்ணீர்.. எச்சரிக்கும் மாவட்ட ஆட்சியர்

 

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டத்திற்குட்பட்ட தவிட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நஞ்சை புகழூரில் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டார்.

கர்நாடகாவிலிருந்து அதிக அளவிலான காவிரி நீர் திறந்துவிடப்படுவதால் கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்தில் உள்ள தவிட்டுப்பாளையம் பகுதியில் குடியிருப்புகளுக்குள் நீர்புகும் நிலையை முன்மூட்டியே கணித்து, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் நேரில் சென்று பொதுமக்களைப் பார்வையிட்டு, தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதா என்றும், மருத்துவ முகாம்கள் முறையாக நடத்தப்படுகிறதா என்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

அதன் பின்னர் பேசிய அவர், ``காவிரியில் சுமார் 2.30 லட்சம் கன அடி அளவிலான நீரும், அமராவதியிலிருந்து சுமார் 5,155 கன
அடி அளவிலான நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து மூத்த ஐ.ஏ.எஸ் அலுவலர்களும், வருவாய் நிர்வாக ஆணையரும் தொடர்ந்து நீர்வரத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்த வண்ணம் உள்ளனர். கரூர் மாவட்டத்துக்கு நீர் திறந்துவிடப்படும் முன்னரே எங்கிருந்து நீர் வரப்பெருகின்றதோ அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உடனடியாக தொடர்புகொண்டு நீர் திறப்பு குறித்த விவரங்களைத் தெரிவிக்கின்றனர். இந்தத் தகவல், கரூர் மாவட்டத்தில் எங்கெங்கு நீர்வரத்து அதிகமாக வரும் என்பதை முன்கூட்டியே கணித்து அங்குள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணிகளை மேற்கொள்ள பயனுள்ளதாக இருக்கின்றது.

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சரும் கரூர் மாவட்டத்தில் நீரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இதுவரை கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம் நஞ்சைபுகழூர் பகுதியில் 89 குடும்பங்களைச் சேர்ந்த 271 நபர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு கிராம ஊராட்சி சேவை கட்டடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத்
தேவையான உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள மக்களுக்கு பாய், போர்வை போன்ற பொருள்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார். இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கென்று சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் காவிரி மற்றும் அமராவதி நீர் வரும் பகுதிகளில் வருவாய்த்துறை, வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களும் ஒத்துழைப்பு தந்து, ஆற்றங்கரையோரப் பகுதிகளில் குளிப்பதையோ, வேடிக்கைப் பார்க்கச் செல்வதையோ, செல்ஃபி புகைப்படங்கள் எடுப்பதையோ தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் நீர்பாதிப்பு குறித்த அவசர தகவல்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!