கருணாநிதிக்கு இரங்கல் கவிதை வெளியிட்ட பெண் காவலர் பணியிட மாற்றம்!

கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைதளங்களில் கவிதை வீடியோ பதிவு செய்த திருச்சி பெண் காவலர் ஒருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது.
 
கருணாநிதிக்கு இரங்கல் கவிதை வெளியிட்ட பெண் காவலர் செல்வராணி
 
திருச்சி மாநகரக் காவல் நுண்ணறிவுப்பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார் செல்வராணி. இவர், கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். காவல் பணிகளுக்கு இடையில் கவிசெல்வா எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வரும் இவர், திருச்சி மட்டுமல்லாமல் பெரம்பலூர், அரியலூர், கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் கவியரங்கம்,  பட்டிமன்றங்களிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், தி.மு.க தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் செல்வராணி கவிதை பாடியதுடன், வீடியோவாக பதிவு செய்து தனது முகநூலில் வெளியிட்டார். 5.44 நிமிடங்கள் உள்ள அந்த வீடியோவின் இறுதிப் பகுதியில் தி.மு.க தலைவர் கருணாநிதியும் கவிஞர், நானும் கவிஞர் என்பதால் இந்த இரங்கல் கவிதை. அவரின் மறைவுக்காக உணர்ச்சியின் வெளிப்பாடு என்றும் இதை அரசியலாக்கிவிட வேண்டாம் எனவும் குறிப்பிட்டு அழுதபடி அந்த வீடியோ இருந்ததாகக் கூறப்படுகிறது. பெண் காவலர் செல்வராணியின் இரங்கல் வீடியோ முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பெண் காவலர் செல்வராணியை திருச்சி மாநகரக்காவல் நுண்ணறிவுப்பிரிவில் இருந்து, மத்திய மண்டல காவல்துறைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த உத்தரவைத் திருச்சி மாநகரக் காவல் ஆணையர் அமல்ராஜ் பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது. காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவில், நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கவி செல்வா எனும் பெயரில் உள்ள சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்ட வீடியோ அழிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்க, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்காகப் பெண் காவலர் செல்வராணி, இரங்கல் கவிதை வீடியோ வெளியிட்டதால்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் எனவும், ஒருவரின் இறப்புக்கு அஞ்சலி செலுத்தியதற்காக  இப்படி மாற்றுவது நியாயமா  என ஆதங்கப்படுகின்றனர் சக காவலர்கள்.

செல்வராணியின் பணியிட மாற்ற விவகாரம் திருச்சி காவல்துறையிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!