வைகை அணையில் பறந்த ஹெலிகேம்!− அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள் | Drone flies in Vaigai Dam area without permission

வெளியிடப்பட்ட நேரம்: 11:37 (20/08/2018)

கடைசி தொடர்பு:11:37 (20/08/2018)

வைகை அணையில் பறந்த ஹெலிகேம்!− அதிர்ச்சியடைந்த அமைச்சர்கள்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ளது வைகை அணை. இன்று காலை அணையைத் திறக்கும்போது ஹெலிகேம் ஒன்று வைகை அணையை வட்டமடித்தது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

வைகை அணையின் மேல் பறந்த ஹெலிகேம்

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று மாலை தனது முழுக்கொள்ளளவான 69 அடியை எட்டியது வைகை அணை. இந்த நிலையில், இன்று காலை பாசனத்துக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்காக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ஜி.பாஸ்கரன், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அணையின் ஏழு ஷட்டர்களை ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள் அனைவரும் ஒவ்வொன்றாகத் திறந்துவைத்தனர். ஷட்டர்களில் இருந்து தண்ணீர் வெளியே வரும் காட்சியை அனைவரும் ரசித்துக்கொண்டிருக்கும்போதே, ஹெலிகேம் ஒன்று அணையை வட்டமடித்தது. இதைக்கண்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அது வீடியோ எடுக்க ஒருவர் பயன்படுத்திய ஹெலிகேம் என்று தெரியவந்தது.

இது குறித்து வைகை அணையின் கோட்டப்பொறியாளரிடம் கேட்டபோது, ``யார் அந்த ஹெலிகேமை இயக்குகிறார்கள் என்று எனக்குத் தெரியாது. என்னிடம் எந்த அனுமதியும் வாங்கவில்லை" என்று சொல்லி அதிர்ச்சிகொடுத்தார். அணையின் பாதுகாப்பில் இவ்வளவு மெத்தனமாக இருப்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது. அமைச்சர்கள், அதிகாரிகள் சூழ்ந்திருந்த வைகை அணையில் ஹெலிகேம் பறந்தது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.