வெளியிடப்பட்ட நேரம்: 12:11 (20/08/2018)

கடைசி தொடர்பு:13:13 (20/08/2018)

மாற்றப்படுகிறாரா அறநிலையத் துறை ஆணையர் - பின்னணி என்ன? #VikatanExclusive

இந்துசமய அறநிலையத் துறையில் சிலைக் கடத்தல் மற்றும் மோசடி வழக்குகளில் அதன் உயர் அலுவலர்கள் சிலர் கைது செய்யப்பட்டதையடுத்து தற்போதைய அறநிலையத் துறை ஆணையர் மாற்றப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.

அறநிலையத்துறை ஆணையர் ஜெயா

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் 42-வது ஆணையராக ஜெயா, கடந்த ஓராண்டாகப் பதவியில் இருந்து வருகிறார். பந்தநல்லூர் சிலை காணாமல்போன வழக்கு முதல் தற்போதைய காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கு வரை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், அறநிலையத் துறையைச் சேர்ந்த துணை ஆணையர்கள் முதல் கூடுதல் ஆணையர் வரை பலரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், ஆணையர் ஜெயா, சிலைக் கடத்தலைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றும் கடந்த ஓராண்டாக அதிக அளவில் கோயில்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்வதில் சுணக்கம் காட்டிவருவதாகவும் இவர் மீது மேலிடத்துக்குப் புகார் சென்றுள்ளது. சிலைக் கடத்தல் வழக்குகளில் சிலருக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு ஜெயா செயல்படுகிறார் என்றும் அறநிலையத் துறையிலேயே சிலர் கூறுகின்றனர்.

' இதனால் ஆணையர் ஜெயா இன்னும் சில நாள்களில் மாற்றப்படலாம் என்று தெரியவருகிறது. அவருக்குப் பதிலாக, வெள்ளப் பணிகளில் தீவிரம் காட்டிய அமுதா ஐ.ஏ.எஸ் பதவிக்கு வரலாம்' என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.