"11 நோய்களைச் சரிப்படுத்தும் தென்னங்குருத்து!"- சாலையோர வியாபாரி சொல்லும் தகவல்! | street salesman tells about usages of coconut

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (20/08/2018)

கடைசி தொடர்பு:14:20 (20/08/2018)

"11 நோய்களைச் சரிப்படுத்தும் தென்னங்குருத்து!"- சாலையோர வியாபாரி சொல்லும் தகவல்!

இயற்கை உணவு, பாரம்பர்ய உணவு மீதான விழிப்பு உணர்வுக்குப் பிறகு இயற்கையான உணவுப்பொருள்கள் எல்லாவற்றுக்கும் ஒரு புது மவுசு வந்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உச்சி தென்னை மரத்துக்குள் இருக்கும் தென்னங்குருத்துக்கும் அப்படிதான் ஒரு கிராக்கி ஏற்பட்டு, அதன் விற்பனை கரூரில் சக்கைப்போடு போடத் தொடங்கி இருக்கிறது.

தென்னங்குருத்து

பொதுவாகத் தென்னை மரத்தில் இருக்கும் அனைத்துப் பொருள்களும் மனிதர்களுக்குக் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை உள்ளது. இளநீர், தேங்காய், தென்னங்குருத்து, பாலை என்று தென்னையில் உள்ள அத்தனைப் பொருள்களும் குளிர்ச்சியை ஏற்படுத்தி, மனிதர்களுக்கு பல நன்மைகளைப் பயக்குகின்றன. அதனால், ரசாயன குளிர்பானங்களை அருந்தி வந்த இளைஞர்கள் இப்போது இளநீர், வெள்ளரி, தர்பூசணி என்று இயற்கை குளிர்ச்சி உணவுப்பொருள்களை சாப்பிடத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில், தென்னங்குருத்தின் விற்பனை கரூரில் களைக்கட்டத் தொடங்கி இருக்கிறது.

தென்னங்குருத்து

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து கோவை செல்லும் சாலையின் ஓரமாக தென்னங்குருத்துகளை வைத்து விற்பனை செய்துகொண்டிருக்கிறார் ரவிக்குமார். ஈரோடு வெண்டிப்பாளையத்தைச் சேர்ந்த இவர், கடந்த 12 வருடங்களாக இந்த தென்னங்குருத்துகளை விற்பனை செய்துகொண்டிருக்கிறாராம். இதுபற்றி அவரிடம் பேசினோம். ரவிக்குமார்``எனக்கு ரெண்டு பையன்கள். மூணு பேரும் சேர்ந்து கடந்த 12 வருஷமா தென்னங்குருத்தை விற்பனை செய்கிறோம். கடந்த இரண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை இதை யாரும் வாங்க ஆர்வப்படமாட்டாங்க. ஏதோ தீண்டத்தகாத பொருளாக இதை பார்த்துட்டு போவாங்க. ஆனால், கடந்த இரண்டு வருஷமா இதை எல்லோரும், குறிப்பாகக் இளைஞர்கள் ஆர்வமாக வந்து வாங்கிச் சாப்பிடுறாங்க. அதனால், ஈரோடு, கரூர், திருப்பூர்ன்னு மூணு இடத்துல இதை விற்கிறோம்.

பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, லோக்கல் பகுதிகள்ன்னு தென்னை தோப்புகளை அழிக்கும் இடங்களில் இந்த குருத்துகளை காசு கொடுத்து வாங்கிட்டு வருவோம். ரெகுலரா ஆட்டோவுல ஏத்திகிட்டு வந்து விற்பனை செய்கிறோம். இந்த தென்னங்குருத்தைச் சாப்பிட்டா உடம்பில் குளிர்ச்சி ஏற்படும். சூடு குறையும். அதோடு, இந்த தென்னங்குருத்துக்கு வயிற்றுப்புண், கல் அடைப்பு, தோல்வியாதிகள், தைராய்டு, முகப்பரு, பசியின்மை, கர்ப்பப்பை கோளாறு, வெள்ளைப்படுதல், மாதவிடாய், சர்க்கரை நோய், நரம்புத் தளர்ச்சி பிரச்னைனு பல நோய்களும் குணமாகும். உடம்புக்கு கேடு தரும் கண்டகண்ட நொறுக்குத்தீனிகளை தின்பதை விட்டுவிட்டு இந்தத் தென்னங்குருத்துகளை வாங்கிச் சாப்பிடலாம். குறிப்பாகக் குழந்தைகளுக்கு இதுபோன்ற இயற்கை உணவுப்பொருள்களைச் சாப்பிடப் பழக்கலாம்" என்றார்.


[X] Close

[X] Close