வெளியிடப்பட்ட நேரம்: 13:18 (20/08/2018)

கடைசி தொடர்பு:15:47 (20/08/2018)

`அவள் நட்பை முறித்துவிட்டேன்.. ஆனால், நம்பவில்லை'- வி.சி.க நிர்வாகியைக் கொலைசெய்த லோகேஷ் வாக்குமூலம்

கொலை செய்யப்பட்ட ஜோசப்

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகரை கொலை செய்த லோகேஷ், போலீஸாரிடம் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சென்னைக் கொளத்தூர் ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்தவர் ஜோசப் என்கிற ரஞ்சித்குமார். 41 வயதாகும் இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி அணி துணைச் செயலாளராக இருந்துள்ளார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். பத்திரிகை ஒன்றையும் நடத்திவந்தார். இதனால் வில்லிவாக்கம், திருமங்கலம், ஐ.சி.எப் ஆகிய போலீஸ் நிலையங்களில் ஜோசப்புக்கு நல்ல அறிமுகம் உண்டு. இவர் நேற்று முன்தினம் இரவு அயனாவரம் வ.உ.சி.நகர் பள்ளி வாசல் அருகே நியூ ஆவடி சாலையில் ரவுடிகள் ஒழிப்பு பிரிவில் காவலராக இருக்கும் சதீஷ் என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ஜோசப்பை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. அதை சதீஷ் தடுத்தபோது அவரின் கையிலும் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவம் குறித்து அயனாவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்போது ஜோசப்பை கொலை செய்தது வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லோகேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் என்று தெரிந்தது. தொடர்ந்து, லோகேஷ், அவரின் கூட்டாளிகள் அஜித், வேலு, ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இன்னும் சிலரை போலீஸார் தேடிவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜோசப்புக்கும் லோகேஷுக்கும் ஏற்கெனவே பழக்கம் இருந்துள்ளது. இந்தச் சமயத்தில் ஒரு பெண் விவகாரத்தில் ஜோசப்புக்கும் லோகேஷுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் கடந்த டிசம்பர் மாதத்தில் லோகேஷை, ஜோசப் வெட்டினார். இதுதொடர்பாக கொரட்டூர் போலீஸார் ஜோசப்பை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து கடந்த மாதம்தான் ஜோசப் வெளியில் வந்தார். ஜோசப்பை திட்டம்போட்டு லோகேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள்  கொலை செய்துவிட்டனர்" என்றனர். 

விசிக நிர்வாகிகளிடம் பேசினோம். ``ஜோசப் கட்சிப் பணிகளில் தீவிரமாகச் செயல்பட்டவர். அவருக்கும் லோகேஷுக்கும் பழக்கம் உண்டு. ஆனால், லோகேஷ் எங்கள் கட்சியில் இல்லை. சிறையிலிருந்து வெளியில் வந்த ஜோசப்புக்குக் கட்சியில் இருந்த பிரச்னைகளை மாநில நிர்வாகி ஒருவர் பேசி முடித்தார். அதன்பிறகு ஜோப்பின் 41-வது பிறந்தநாள் கடந்த வாரத்தில் சிறப்பாக நடந்தது. அப்போது, கட்சியினர் அனைவரும் வந்து வாழ்த்து தெரிவித்தனர். கட்சிப் பிரச்னை தலைமைக்குத் தெரியும். அவர்கள், ஜோசப்பை `இனி கட்சிப் பணியை மட்டும் செய்யுங்கள்' என்று அறிவுரை கூறினர். இதனால் ஜோசப், வெளியில் எங்கும் செல்லாமல் அமைதியாக இருந்துவந்தார். எப்போதும் அவரைச் சுற்றி ஒரு கூட்டம்  இருக்கும். கட்சித் தலைமை கூறிய பிறகு அவர் தனியாகத்தான் இருந்தார். இதைத்தான் லோகேஷ், தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். சம்பவத்தன்றுகூட காவலர் சதீஷ், ஜோசப் மற்றும் சிலர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த லோகேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகள் ஜோசப்பை குறி வைத்து கொலை செய்துவிட்டனர். ஜோசப்பைக் காப்பாற்ற அங்கிருந்தவர்கள் போராடினர். இருப்பினும் மறைவான இடத்தில் வைத்து அவரின் கதையை முடித்துவிட்டனர். தடுக்கச் சென்ற காவலர் சதீஷுக்கு மட்டும் கையில் வெட்டு விழுந்தது. ஜோசப்புக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``லோகேஷிடம் விசாரித்தபோது, ஜோசப்புக்குத் தெரிந்த பெண் ஒருவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதில்தான் எங்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கடந்த டிசம்பரில் என்னை ஜோசப் கொலை செய்ய முயன்றார். நல்லவேளை நான் உயிர் பிழைத்துவிட்டேன். அந்தப் பெண்ணின் நட்பையும் நான் விட்டுவிட்டேன். ஆனால், அதை ஜோசப் நம்பவில்லை. என் மீது ஜோசப் கோபத்தில் இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதுதொடர்பாக அவரிடம் சமாதானம் பேச பலவகையில் முயற்சி செய்தேன். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதனால் ஜோசப் உயிரோடு இருந்தால் நான் நிம்மதியாக இருக்க முடியாது என்று கருதினேன். இதனால்தான் ஜோசப், தனியாக வரும் சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தேன். காவலர் சதீஷ் மற்றும் விசிக பிரமுகர்களுடன் ஜோசப், பேசிக்கொண்டிருக்கும் தகவல் கிடைத்ததும் அங்கு என்னுடைய கூட்டாளிகளுடன் சென்று அவரைக் கொலை செய்தோம் என்று வாக்குமூலமாக கொடுத்துள்ளார். லோகேஷ் மீதும் நிலுவையில் சில வழக்குகள் உள்ளன. சம்பவ இடத்தில் இருந்த காவலர் சதீஷ், ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். அவர்தான் முதலில் எங்களுக்குத் தகவல் கொடுத்தார்" என்றார். 

ஜோசப்புக்கும் லோகேஷுக்கும் சமாதான பேச்சுவார்த்தை நடந்த சமயத்தில்தான் இந்தக் கொலை நடந்ததாகச் சொல்கின்றனர் உள்விவரம் தெரிந்தவர்கள். ஆனால், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்று போலீஸார் மறுக்கின்றனர்.