`பகலில் கோழி வியாபாரம்...இரவில் கொள்ளையடிப்பேன்'- கால் டாக்ஸி மூலம் கொள்ளையடித்த கதை

அனுப்குமார்

போலீஸூக்கும் பொதுமக்களுக்கும் என் மீது சந்தேகம் வராமலிருக்க கோழி வியாபாரம் செய்வதைப் போல நடித்து இரவில் கொள்ளையடிப்பேன்' என்று கொள்ளையன் ஒருவர் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

வேளச்சேரி பகுதியில் ஏழுமலை என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 4000 ரூபாய் பணத்தை கொள்ளையடித்தபோது போலீஸாரிடம் ஒருவர் சிக்கினார். அவரிடம் இன்ஸ்பெக்டர் வேலு தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `வழிப்பறியில் ஈடுபட்டவர், சென்னை செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த அனுப்குமார். 32 வயதாகும் இவர், குடும்பத்துடன் வசித்துவருகிறார். வீட்டில் கோழிகளை வளர்த்துவரும் இவர், பணக்காரர் போல ஆடம்பரமாக வாழ்ந்துவந்தார். கோழி வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைப்பதுபோல அந்தப் பகுதியினரை நம்ப வைத்துள்ளார். ஆனால், உண்மையில் இவர், பிரபல கொள்ளையன் என்பது விசாரணையில் எங்களுக்குத் தெரியவந்தது. 

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பூட்டிய வீடுகளில் கொள்ளையடித்துள்ளார். இதற்காக அவர், பகலில் நோட்டமிடுவார். பிறகு, கால் டாக்ஸியை புக் செய்து, கொள்ளையடிக்கும் வீட்டுக்குச் செல்வார். பிறகு கொள்ளையடித்து விட்டு கால் டாக்ஸியில் ஏறி நகைகளுடன் வீட்டுக்குச் செல்வார். திருடிய நகையை வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்து, தேவைக்கு ஏற்ப அதை விற்று செல்வழித்து ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். அதோடு பல பெண்களுடனும் இவருக்கு பழக்கம் இருந்துள்ளது. திருடிய நகைகள், விலை உயர்ந்த பொருள்களைப் பெண்களுக்குப் பரிசாகக் கொடுத்து அசத்தியும் உள்ளார். இதையடுத்து, அவரிடமிருந்து 150 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளோம். இவர் மீது 15 வழக்குகள் உள்ளன" என்றனர். 

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், `அனுப்குமாரிடம் விசாரித்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் பூட்டிய வீடுகளில் தனிஒருவனாக கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளை நடந்த இடங்களில் பதிவான சி.சி.டி.வி. கேமராவில் அனுப்குமாரின் உருவம் சரியாகத் தெரியவில்லை. இதனால்தான் அவரைப் பிடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. சி.சி.டி.வி. கேமராவில் கால் டாக்ஸிகள் வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதை நாங்கள் சந்தேகிக்கவில்லை. கால் டாக்ஸியை புக் செய்து கொள்ளையடித்த நகைகளை அனுப்குமார் கொண்டு சென்றது தற்போதுதான் தெரியவந்தது. அவரின் செல்போன் நம்பரிலிருந்துதான் கால் டாக்ஸி முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுப்குமார், எங்களையும் பொதுமக்களையும் ஏமாற்றதான் கோழி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால், கொள்ளையடிப்பதுதான் அவரின் பிரதான தொழில். அதன்மூலம் ஆடம்பரமாக வாழ்ந்துவந்துள்ளார் அனுப்குமார்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!