வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (20/08/2018)

கடைசி தொடர்பு:17:48 (20/08/2018)

சின்னப்பிள்ளை காலில் வாஜ்பாய் ஏன் விழுந்தார்?

``நான் செஞ்சது ஒண்ணும் பெரிய சேவை இல்லை, ஆனாலும் அதைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு, என் காலில் விழுந்து ஆசி வாங்க நினைச்ச வாஜ்பாயின் குணம் உயர்ந்தது. அதுக்குப் பின்னாலும் மக்களுக்கான கோரிக்கைகளை வைத்து, அவருக்கு மனு அனுப்புவேன். அதைச் செய்வதாகச் சொல்லி பதில் வந்துச்சு."

சின்னப்பிள்ளை காலில் வாஜ்பாய் ஏன் விழுந்தார்?

``விருது வாங்க அந்த மேடையில் மொத ஆளா, நான் போய் நின்னதும், `மதுரைச் சின்னப்பிள்ளைனு' என் பேரைச் சொல்லி, அவங்க பாஷையில (ஹிந்தி) ஏதோ சொன்ன பிரதமரு வாஜ்பாய், திடீர்னு என் காலில் விழுந்து வணங்கியதும், எனக்குத் திடுக்குன்னு ஆயிருச்சு. நான் பதறிப்போயிட்டேன். பதிலுக்கு நான் குனிஞ்சு அவரோட கையப் புடிச்சுத் தூக்கி விடவும் சங்கடமா போயிருச்சு. அப்புறம்தான் அவர் எனக்கு விருதைக் கொடுத்தாரு. இந்த நாட்டை ஆளுற பிரதமர், சாதாரணமா என் காலில் விழுந்ததை நினைக்கும்போது இப்போதுகூட எனக்குப் பிரமிப்பா இருக்கு. காலத்துக்கும் மறக்க முடியாத பெருமையைத் தந்தவர் அவர். அப்படிப்பட்டவரு இறந்துட்டார்னு கேள்விப்பட்டதுலருந்து என்னோட மனசு சரியில்லை தம்பி" என்று விசும்புகிறார் புல்லுசேரி சின்னப்பிள்ளை.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்த தகவல் வெளியானவுடன், தமிழக மக்கள் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வந்தவர் மதுரை சின்னப்பிள்ளைதான். அந்தளவுக்கு வாஜ்பாய் என்றாலே, அவர் சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வணங்கியதுதான், அனைவர் மனதிலும் நிழலாடுகிறது. தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பெரிய அளவில் வளர்ந்ததற்கு முன்னோடியாக இருந்தவர் சின்னப்பிள்ளை. பொருளாதர வசதி, அரசியல் பின்னணி, உயர் கல்வி என எந்தப் பின்புலமும் இல்லாமல் தன்னுடைய இயல்பான செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சின்னப்பிள்ளை. தற்போது, இந்தியா முழுவதும் லட்சக்கணக்கில் கிளை பரப்பியுள்ள களஞ்சிய இயக்கத்தின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குத் தலைவியாக இருக்கும் சின்னப்பிள்ளைதான், அந்த இயக்கத்தை நடத்தும் `தானம் அறக்கட்டளைக்கு' ஆதாரமாகவும் நம்பிக்கையாகவும் உள்ளார்.

வாஜ்பாய் காலில் விழுந்த சின்னப்பிள்ளை

பள்ளிக்கூடமே செல்லாமல் சிறுவயதிலிருந்தே விவசாயக் கூலி வேலைகளைச் செய்துவந்த சின்னப்பிள்ளைக்குப் பால்ய வயதிலயே திருமணம் நடந்தது. புல்லுசேரிக்கு வாழ்க்கை பட்டு வந்தவருக்கு, வழக்கமான கிராமப் பெண்களுக்கான போராட்டமான வாழ்க்கையே அமைந்தது. அந்தக் காலகட்டத்தில் புல்லுசேரி பக்கம் விழிப்புஉணர்வு பிரசாரம் செய்ய வந்த மாதர் சங்கத்தினர் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பேச்சுகளைக்கேட்டு அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். அதன் மூலம் மதுவுக்கு எதிராக, சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமங்கள்தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டார். அதன்பின் கிராமத்துக்குத் தேவையானவற்றை அரசு அதிகாரிகளிடம் மனுவாக எழுதிக் கொடுத்து, அவற்றை தங்கள் கிராமங்களுக்கு ஏற்படுத்திக்கொடுத்து, சாதித்து வந்தார்.

மதுரையில் செயல்பட்டு வந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான `தானம் அறக்கட்டளை' தொடங்கிய களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுத் திட்டத்துக்குச் சின்னப்பிள்ளையை தலைவராக நியமித்தது. வட்டிக்கு வாங்கி காலம் முழுவதும் கடனை அடைக்க முடியாமல் திணறும் கிராமப் பெண்களுக்கு `களஞ்சியம் இயக்கம்' பெரும் உதவியாக இருந்தது. எங்கு பார்த்தாலும் சுய உதவிக் குழுக்கள் பரவின. இந்த இயக்கத்தைத் தமிழகம் முழுக்க கொண்டும் செல்லும் பணியில் சின்னப்பிள்ளை அயராது பாடுபட்டார். இந்த மகளிர் சுய உதவிக்குழுக்களின் எழுச்சி தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதால், அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி அரசு, சின்னப்பிள்ளையை கௌரவிக்கும்விதமாக அவரைப் பாராட்டி விருது வழங்கியது. சின்னப்பிள்ளையின் புகழ் டெல்லிவரை சென்றதால் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், `சக்தி புரஸ்கார்' விருதை சின்னப்பிள்ளைக்குக் கொடுத்து கௌரவித்தார். அதற்கான விழாவில் கலந்து கொண்டபோதுதான், சின்னப்பிள்ளையின் காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கினார். அந்த நிகழ்வின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவே சின்னப்பிள்ளையைத் திரும்பிப் பார்க்கச் செய்தார் அவர். அதற்குப் பிறகும் சின்னப்பிள்ளை ஓய்ந்துவிடவில்லை. தொடர்ந்து பணி செய்கிறார். 

சின்னப்பிள்ளை

நாட்டிலுள்ள பல கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குச் சென்று கிராமப்புற பொருளாதாரம் பற்றி மாணவர்களிடையே பேசி வருகிறார். மதுப்பழக்கத்தின் கேடு, அதனால் ஏற்படும் தீமைகள் பற்றிப் பேசுகிறார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இப்போதைய அ.தி.மு.க. அரசு, சில மாதங்களுக்கு முன் சின்னப்பிள்ளைக்கு விருது கொடுத்து கௌரவித்தது. 

வெளியுலகமோ, அரசியலோ தெரியாத வெள்ளந்தி மனுஷியான சின்னப்பிள்ளைக்குத் தெரிந்ததெல்லாம் சுய உதவிக் குழுக்கள் பற்றிய சிந்தனைதான். அப்படிப்பட்டவரை வாஜ்பாயின் மரணம் கலங்க வைத்துள்ளது. ``நான் செஞ்சது ஒண்ணும் பெரிய சேவை இல்லை, ஆனாலும் அதைப்பத்தி தெரிஞ்சுக்கிட்டு, என் காலில் விழுந்து ஆசி வாங்க நினைச்ச வாஜ்பாயின் குணம் உயர்ந்தது. அதுக்குப் பின்னாலும் மக்களுக்கான கோரிக்கைகளை வைத்து, அவருக்கு மனு அனுப்புவேன். அதைச் செய்வதாகச் சொல்லி பதில் வந்துச்சு. கொஞ்ச காலமா அவருக்கு உடம்பு சரியில்லாமல் இருக்குன்னு கேள்விப்பட்டு கவலையா இருந்துச்சு. போய் பார்த்துட்டு வரலாமான்னு நினைச்சேன். ஆனால், அதுக்கான சந்தர்ப்பம் எனக்கு அமையல. இப்ப எல்லோரையும் விட்டு போயிட்டாரு'' என்றார். 

புல்லுச்சேரி அருகில் அப்பன் திருப்பதியில் அமைந்துள்ள களஞ்சிய அலுவலகத்தில் வாஜ்பாயின் படத்தை வைத்து அஞ்சலி செலுத்தி அவருக்கு தன் நன்றியை வெளிப்படுத்தினார் சின்னைப்பிள்ளை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்