வெளியிடப்பட்ட நேரம்: 15:58 (20/08/2018)

கடைசி தொடர்பு:15:58 (20/08/2018)

`கட்டிப்பிடிக்கிறார்... ஆபாச படங்களைக் காண்பிக்கிறார்' - போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த பகீர்

  போலீஸ்

தமிழக காவல்துறையில் உயர் பதவியில் பணியாற்றும் ஐ.ஜி ஒருவர் மீது அவருக்கு கீழே பணியாற்றும் பெண் போலீஸ் எஸ்.பி ஒருவர் பாலியல் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கும் போலீஸாருக்கும் சிம்மசொப்பனமாக இருக்கும் முக்கிய காவல்துறை பதவியில் ஐ.ஜி ரேங்கில் கடவுளின் பெயரைக் கொண்ட ஒருவர் இருக்கிறார். இவருக்கு கீழ் எஸ்.பி ரேங்கில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், காவல்துறை உயரதிகாரிகளிடம் சமீபத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், `கடவுளின் பெயரைக் கொண்ட அந்த அதிகாரி தனக்கு பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துவருகிறார்' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தப் புகாரில் ஆபாச படங்களைக் காணப்பிப்பதாகவும் தன்னைக் கட்டிப்பிடிக்க முயல்வதாகவும் பல வழியில் பாலியல் அழைப்பு விடுப்பதாகவும் கூறியுள்ளார். 

இந்தப் புகாரைப் பார்த்த போலீஸ் உயரதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். புகார் குறித்து கேள்விப்பட்ட அரசு உயரதிகாரி, விசாகா கமிட்டி மூலம் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். அப்போதுதான் விசாகா கமிட்டி பெயரளவுக்குச் செயல்படுவது தெரியவந்தது. உடனே, பெண் போலீஸ் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் கமிட்டி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி அருணாசலம், காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டன்ட் சரஸ்வதி, டி.ஜி.பி அலுவலக சீனியர் நிர்வாக அலுவலர் ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தக் கமிட்டியினரின் கவனத்துக்கு பெண் எஸ்.பி கொடுத்த புகார் சென்றுள்ளது. அவர்கள், பெண் எஸ்.பி-யிடம் நடந்தது என்ன என்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரமாக எழுத்துபூர்வமாகத் தெரிவித்துள்ளார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஐ.ஜி-க்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படவுள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர். 

 யார் அந்த ஐ.ஜி. 

சென்னையில் போலீஸ் கமிஷனராக நட்ராஜ் (தற்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ) இருந்தபோது துணை கமிஷனராகக் கடவுளின் பெயரைக் கொண்ட அதிகாரி பணியாற்றினார். 1997-ம் ஆண்டு பேட்ஜ். குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் விழுப்புரம், நெல்லையில் டி.ஐ.ஜி-யாக பணியாற்றியவர். அப்போது அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவந்தார். இதனால், தென்மண்டல ஐ.ஜி-யானார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த உயர்பதவிக்கு ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார். ஐ.ஜி-க்கு வேண்டப்பட்ட போலீஸாரிடம் கேட்டபோது, ``சார் அப்படிப்பட்டவர் அல்ல, ரொம்ப கண்டிப்பானவர். அவருக்கு கீழ் பணியாற்றும் மற்ற பெண் அதிகாரிகள் யாரும் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கவில்லை. காழ்பு உணர்ச்சி காரணமாக இந்தப் பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாருக்குப் பின்னணியில் சில உண்மைகள் உள்ளன" என்றனர். 

அதே நேரத்தில் புகார் கொடுத்த பெண் போலீஸ் எஸ்.பி தரப்பில் பேசியவர்கள், ``நடந்த சம்பவம் உண்மைதான். இலைமறை காயாக நடந்த இந்தச் சம்பவம் தற்போது வெளியில் தெரிந்துள்ளது. விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் வெளிவரும்" என்கின்றனர். விசாகா கமிட்டியிடம் சென்றுள்ள இந்தப் புகாருக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். அரசும் இந்தப் புகாரின் பேரில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. 

 போலீஸ் ஐ.ஜி மீது பெண் எஸ்.பி கொடுத்த  பாலியல் குற்றச்சாட்டுப் புகார் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.