வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (20/08/2018)

கடைசி தொடர்பு:16:05 (20/08/2018)

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை..! தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு நிரந்தரமாக மூடியதற்கு எதிராக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணக்கு வந்தது. இதில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஸ்டெர்லைட் ஆலையில் மாசு ஏற்பட்டது உறுதி என்று அறிக்கை தாக்கல் செய்தனர். மேலும், இந்த அறிக்கையானது, கடந்த 16 மற்றும் 17-ம் தேதிகளில் ஆய்வு நடத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது எனத் தெரிவித்தனர்.

வேதாந்தா நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஸ்டெர்லைட் ஆலையைப் பராமரிக்கத் தேவையான நிபுணர்கள் தமிழக அரசிடம் இல்லை. ஆலையில் உள்ள கந்தக அமிலத்தைப் பாதுகாக்க ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வாதிட்டனர். தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஸ்டெர்லைட் ஆலையைப் பராமரிக்கத் தேவையான கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஆலையில் ஆய்வு செய்யப்பட்டு அமிலத்தை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம், 'ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு செய்து 6 வார காலத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டது.