சென்னை வி.சி.க பிரமுகர்  கொலை... நிர்வாகிகளுக்கு திருமாவளவன் கூறிய அட்வைஸ்!

கொலை செய்யப்பட்ட ஜோசப்பின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் திருமாவளவன்

சென்னையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் ஜோசப் கொலைசெய்யப்பட்டார். அவரின் உடலுக்கு அஞ்சலிசெலுத்தச் சென்ற கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், நிர்வாகிகளுக்கு முக்கிய அட்வைஸ் வழங்கியுள்ளார். 

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்தவர் ஜோசப். 41 வயதாகும் இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில தொண்டரணி அணி துணைச் செயலாளராக இருந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். இந்த நிலையில், லோகேஷ் மற்றும் அவரின் கூட்டாளிகளால் ஜோசப் படுகொலை செய்யப்பட்டார். இந்தத் தகவல் கிடைத்ததும், ஜோசப்பின் வீட்டுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்றார். அங்கு, அவரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜோசப்பின் மனைவி ஜெயந்தி மற்றும் குழந்தைகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு, நிர்வாகிகளிடம் பேசிய திருமாவளவன், `அமைதியாக இறுதி அஞ்சலியை நடத்துங்கள்' என்று மட்டும் கூறினார். வெளியில் வந்த அவர், ஊடகங்களுக்குப் பேட்டி எதுவும் கொடுக்காமல் சென்றார். 

இதுகுறித்து வி.சி.க நிர்வாகிகள் கூறுகையில், ``ஜோசப் மீதான பஞ்சாயத்தை கட்சியின் மாநில நிர்வாகி ஒருவர் சமீபத்தில்தான் முடித்துவைத்தார். கடந்த 12-ம் தேதிதான் பிறந்தநாளைக் கொண்டாடினார். கட்சித் தலைமை கூறிய பிறகு அமைதியாக இருந்த ஜோசப்பை கொலை செய்துவிட்டனர். தலைவரும் ஜோசப் கொலைகுறித்து விசாரித்தார். பிறகு எந்தப் பிரச்னையும் வேண்டாம். அமைதியாக இறுதி அஞ்சலியைச் செலுத்துங்கள் என்று மட்டும் கூறினார். அதன்படி, அமைதியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டோம். ஜோசப்பை கொலைசெய்தவர்களில் முக்கியமானவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர்" என்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!