வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (20/08/2018)

கடைசி தொடர்பு:18:40 (20/08/2018)

நடிகர்களை வைத்து கேள்விகேட்கும் அளவுக்கு சிபிஎஸ்இ தரம் குறைந்துவிட்டதா?- நீதிபதி கிருபாகரன் காட்டம்

`இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது' என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்


சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகளுக்கு புத்தகச் சுமையைக் குறைப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, சிபிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவிட்டு பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையைத் தாக்கல்செய்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி, `சுற்றறிக்கை வெளியிட்டால் மட்டும் போதாது,  அதை அமல்படுத்த வேண்டும். மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், பள்ளிக் குழந்தைகளின் புத்தகச் சுமையை 15 சதவிகிதம் வரை குறைப்பது தொடர்பான ஒரு மாதிரி திட்டத்தை வகுத்திருப்பதைப் போல,  தமிழகத்தில் ஏன் பின்பற்றக் கூடாது?'' என்று கேள்வி எழுப்பினார்.

வீட்டுப்பாடம்

அதற்கு, சிபிஎஸ்இ தரப்பு வழக்கறிஞர், இது சம்பந்தமாக அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த சுற்றறிக்கையை எப்படி அமல்படுத்தப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை சிபிஎஸ்சி  அமல்படுத்தவில்லை என்று அதிருப்தி தெரிவித்தார். சிபிஎஸ்இ சுற்றறிக்கையும், உயர் நீதிமன்ற உத்தரவும் அமல்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதிபதி, 2- ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என்ற உத்தரவை அமல்படுத்தாத பள்ளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து, மூன்று வாரங்களுக்குள் தேசிய மற்றும் மாநில மொழி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளார்.

இறுதியில், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் இரண்டாம் வகுப்பு பொது அறிவு பாடப் புத்தகத்தில் ரஜினி, சல்மான் கான், ஷாருக் கான் உள்ளிட்ட நடிகர்கள் பற்றி கேள்வி இடம்பெற்றுள்ளதாக மனுதாரர் குற்றம் சாட்டினார். அதற்கு நீதிபதி கிருபாகரன், `நாட்டிலே முதன்மையான கல்வி வாரியமாக விளங்கக்கூடிய சிபிஎஸ்இ-யின் தரம் எங்கே?. தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் விதிகளை சிபிஎஸ்சி பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.