நதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை! | interlinking of river scheme should start from Salem, urges DMDK

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (20/08/2018)

கடைசி தொடர்பு:19:00 (20/08/2018)

நதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை!

நதிநீர் இணைப்பை சேலத்தில் இருந்து தொடங்க கோரிக்கை வைத்த தேமுதிக நிர்வாகிகள்

``சேலம் மேட்டூரில் உள்ள காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், சேலத்தில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை. இந்தியா முழுவதும் நதிநீர் இணைப்பு பற்றிப் பேசிவருகிறோம். முதலில், சேலத்தில்  நதிநீர் இணைப்பு செய்ய வேண்டும்'' என்று தேசிய முற்போக்கு திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்கள்.

இதுபற்றி சேலம் புறநகர் மாவட்டச் செயலாளரும், கட்சியின் உயர் மட்ட குழு உறுப்பினருமான இளங்கோவன், ''காவிரியில் தண்ணீர் விட வேண்டும் என்று கர்நாடகாவிடம் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறோம். அவர்கள் விட மறுத்ததால், உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறோம். இந்த நிலையில், தற்போது காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. சேலம் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 10 நாள்களாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இந்த நீர் வீணாகக் கடலில் கலக்க இருக்கிறது. சேலத்தில் விவசாயத்துக்கும், குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாமல் அலை மோதுகிறோம். நதி நீர் இணைப்புபற்றி பேசக்கூடியவர்கள், முதலில் சேலத்தில் நதிகள் இணைக்கப்பட வேண்டும்.

காவிரி ஆற்றில் இருந்து சரபங்கா நதிக்கும், சரபங்கா நதியில் இருந்து திருமணி முத்தாறுக்கும், திருமணி முத்தாற்றில் இருந்து வசிஷ்ட நதிக்கும் இணைக்க வேண்டும். இப்படி இந்த 3 நதிகளையும் காவிரி ஆற்றோடு இணைத்தால் சேலம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, வேலூர், கடலூர் வரை நீர்ப் பாசன வசதி பெறுவதோடு, குடிநீர் பிரச்னையும் தீரும். அதனால், உடனே சேலத்தில் நதி நீர் இணைப்பு செய்ய வேண்டும்'' என்றார்.