வழிமாறி வந்த காட்டெருமை; பட்டாசு வெடித்து விரட்டும் வனத்துறை! - எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள் | gaur strays into village near salem

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (20/08/2018)

கடைசி தொடர்பு:19:40 (20/08/2018)

வழிமாறி வந்த காட்டெருமை; பட்டாசு வெடித்து விரட்டும் வனத்துறை! - எதிர்க்கும் சமூக ஆர்வலர்கள்

காட்டெருமை

சேலம் ஏற்காடு சேர்வராயன் மலைப்பகுதியில், ஏராளமான காட்டெருமைகள் இருக்கின்றன. அவை, கோடைகாலங்களில் அடிக்கடி தண்ணீர் தேடி ஊருக்குள் வருவது வழக்கம். ஆனால், தற்போது அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்திருக்கும் நிலையில், மக்கள் நடமாடும் மூக்கனேரி பகுதிக்கு ஒரு காட்டெருமை வந்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்தக் காட்டெருமை, தற்போது மூக்கனேரிப் பகுதியில் முகாமிட்டிருப்பதால், அதைக் காண்பதற்கு ஏராளமான பொதுமக்கள் கூடி யிருக்கிறார்கள். இதனால், அந்தக் காட்டெருமை அச்சமடைந்திருக்கிறது. அதைப் பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டிச் செல்வதற்காக சேலம் வனத்துறையினரும், காவல்துறையினரும் வந்திருக்கிறார்கள். மக்களை அவ்விடத்தைவிட்டு கலைந்துசெல்லுமாறு அறிவுறுத்தி வருவதோடு, வனப்பகுதியை நோக்கி அந்தக் காட்டெருமையை விரட்டிவருகிறார்கள்.

காட்டெருமை

நண்பகல் 12 மணியிலிருந்து இந்தக் காட்டெருமையை விரட்டிவருகிறார்கள்; முடியாமல் வனத்துறையும், காவல்துறையும் திணறி வருகின்றன. காட்டெருமையை விரட்டுவதை இளைஞர்களும் சிறியவர்களும் உற்சாகமாகப் பார்வையிட்டுவருகிறார்கள். வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டெருமையை விரட்டிவருவதால், சில சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகிறார்கள்.

இதுபற்றி வனத்துறையினரிடம் விசாரித்தபோது,''ஏற்காடு மலைப்பகுதி அருகில் இருப்பதால், வழிதவறி இப்பகுதிக்கு வந்திருக்கலாம். எப்படி வந்தது என்று குறிப்பாகச் சொல்ல முடியாது. உணவுக்காக வரும்போது வழி தவறியிருக்கலாம். இல்லை, சக எருமைகளோடு சண்டை போட்டுக்கொண்டு வழிதவறி வந்திருக்கலாம். மிருகங்கள், எப்போதாவது தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியே வருவது வழக்கம். அதற்கான காரணங்களைச் சொல்ல முடியாது. வனவிலங்குகள், சத்தத்தைவைத்து திசை திருப்பி அனுப்ப முடியும். அதனால், பட்டாசு வெடித்து விரட்டிவருகிறோம்'' என்றார்கள்.