அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் கேரளாவுக்கு அளிக்கப்படும்- புதுச்சேரி் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் ரூ.5 கோடி ரூபாயை கேரளாவுக்கு அளிக்க உள்ளதாக, முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார்.

முதல்வர் நாராயணசாமி

கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, புதுச்சேரி அரசு சார்பில் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி தரப்படும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்திருக்கிறார். அதேபோல, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்களுடைய ஒருமாத சம்பளத்தை கேரள நிவாரணத்துக்குத் தருவதாகவும் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து நிவாரண உதவிகளைப் பெற்று, கேரளாவுக்கு அனுப்புவதற்கான பல்வேறு பணிகளில் புதுச்சேரி அரசு இறங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டுவரும் நிவாரணப் பொருள்கள் மற்றும் நிதியை கேரளாவுக்கு முறையாக அனுப்புவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.

முதல்வர் நாராயணசாமியிடம் நிதியுதவி அளித்த அரசு ஊழியர்கள்

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, “கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிகள் செய்வதற்காக, புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை கேரள வெள்ள நிவாரணத்துக்கு அளிப்பதற்கு முடிவுசெய்து கடிதம் அளித்துள்ளார்கள். அதன்மூலம், 5 கோடி ரூபாய் நிதி கிடைக்கும். அதேபோல, பொதுத்துறை மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களும் தங்களுடைய ஒருநாள் ஊதியத்தை வழங்க முன்வர வேண்டும். மாநில அரசின் நிதியை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் குழுவுடன் ஆலோசித்துவருகிறோம். வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்காக புதுச்சேரியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களைத் தூர் வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!