கொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்! | People are visiting Kollidam to witness the glory of it

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (20/08/2018)

கடைசி தொடர்பு:22:00 (20/08/2018)

கொள்ளிடத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுவட்டார மக்கள்!

நாகை, கடலூர் மாவட்டங்களை இணைக்கும் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடும் நீரால், சுற்றுலா வரும் மக்களின் வரத்து அதிகரித்துள்ளது.

சிதம்பரம் அருகே, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து இரு கரைகளையும்  பாலத்தையும் தொட்டுச் செல்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடப்பதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஆர்வத்துடன் சுற்றுலா செல்வதுபோல வந்து பார்த்துவிட்டுச் செல்கிறார்கள்.

காவிரி மற்றும் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இரு கரைகளையும் ஆறுகளுக்கு இடையே உள்ள பாலத்தையும் தொட்டவாறு தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. கடந்த 2005 -ம் ஆண்டு, இவ்வாறு கொள்ளிடம் ஆற்றில் சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் சென்றது. அதன் பிறகு வறண்டுபோய், கடல் நீர் உட்புகுந்து காணப்பட்ட கொள்ளிடம் ஆறு தற்போது, காவிரியில் இருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கடல்போல காட்சியளிக்கிறது. 

இதைக் கண்டு ரசிக்க சிதம்பரம், சீர்காழி , மயிலாடுதுறை என 50 கி.மீ சுற்றளவில் உள்ள மக்கள் குழந்தைகளோடு வந்து செல்கின்றனர். சிலர், போலீஸ் தடைகளையும் மீறி பாலத்தில் நின்றவாறு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

மக்கள் கூட்டம் அதிகம் கூடியதால், கொள்ளிடம் பாலத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு போலீஸார் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, கொள்ளிடம் ரயில்வே பாலத்திலும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து கொள்ளிடம் ஆற்றில் செல்லும் நீரை ரசித்து வேடிக்கை பார்த்தனர். கொள்ளிடம் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வாகனங்களைப் பொறுமையாக இயக்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.