மாவட்ட ஆட்சியரிடம் ஆடுகளுடன் மனு கொடுக்க வந்த ஆடு வளர்ப்போர் சங்கத்தினர்! | People comes with goats to Ramnad district collectorate

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (20/08/2018)

கடைசி தொடர்பு:22:30 (20/08/2018)

மாவட்ட ஆட்சியரிடம் ஆடுகளுடன் மனு கொடுக்க வந்த ஆடு வளர்ப்போர் சங்கத்தினர்!

கிராமக் கண்மாயில் ஆடுகள் குடிக்க தண்ணீர் வசதி செய்து தர வலியுறுத்தி, மாவட்ட ஆடு வளர்ப்போர் சங்கத்தினர் ஆடுகளுடன் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தது ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆடு வளர்ப்போர் சங்கத்தினர் ஆடுகளுடன் மனு கொடுக்க வந்தனர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் கடம்போடை கிராமத்தில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், கடும் வறட்சியின் காரணமாகக் கிராமத்தில் உள்ள கண்மாய் வறண்டுகிடக்கிறது. இதனால், ஆடுகள் குடிக்கப் போதுமான நீர் ஆதாரம் இல்லை. கிராமத்தில் உள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீரைப் பெரும்பாலான ஆடுகள் குடிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவுநீரைப் பருகியதால் சில ஆடுகள் தொற்றுநோய் ஏற்பட்டு இறந்து போயின. 

இந்நிலையைப் போக்கும் வகையில், கடம்போடை கிராமத்துக் கண்மாய்  உள்வாய் பகுதியில் ஒரு குளம் அமைத்து, ஆடுகளின் தண்ணீர்த் தாகத்தைப் போக்கும் வகையில் போதுமான தண்ணீர் வசதி செய்து தரக் கோரி, ஆடு வளர்ப்போர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்பதற்காக ஆடுகளுடன் வந்தனர். இதைக் கண்ட போலீஸார், ஆடுகளுடன் சென்று ஆட்சியரை சந்திக்க அனுமதி மறுத்தனர். இதையடுத்து, மனு அளிக்க வந்த சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுவை அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க ஆடுகளுடன் கிராமத்தினர் வந்ததால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு உண்டானது.


[X] Close

[X] Close