`டெல்டா மாவட்டங்களை முதலமைச்சர் பார்வையிட வேண்டும்!’ - முன்னாள் அமைச்சர் பழனி மாணிக்கம் வலியுறுத்தல்

தமிழக முதலமைச்சர் காவிரி டெல்டா மாவட்டங்களைப் பார்வையிட வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார். 

பழனிமாணிக்கம் - எடப்பாடி பழனிசாமி

காவிரி மற்றும் கொள்ளிடத்தில் அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையிலும்கூட பெரும்பாலான வாய்க்கால்கள் மற்றும் ஏரிகளுக்குத் தண்ணீர் வரவில்லை. இது தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,``மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 1.94 லட்சம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்தத் தண்ணீர் கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் திறக்கப்பட்டு 27 நாள்கள் ஆகியும் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, பூதலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 66 ஏரிகளுக்கு இன்னும் தண்ணீர் வரவில்லை. உய்யக்கொண்டான், கட்டளை வாய்க்கால்களைத் தூர்வாரி, இங்குள்ள அனைத்து ஏரிகளிலும் தண்ணீர் நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக கடைமடைப் பகுதிகளில் தூர்வாரவில்லை. முறையாகத் தூர்வாரி இருந்தால் கொள்ளிடத்தில் வீணாகும் நீரைச் சேமித்து இருக்கலாம். அந்த நீரைக் கொண்டு டெல்டா பாசனப் பகுதிகளில் உள்ள 2,300 ஏரிகளில் நீரை சேமித்து இருக்கலாம். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பாசனப் பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாகச் சரி செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!