`அண்ணா அறிவாலயத்தில் வரும் 28-ல் பொதுக்குழுக் கூட்டம்’ - தி.மு.க அறிவிப்பு!

'தி.மு.க பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், வரும் 28-ம் தேதி நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

திமுக

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்ட வேண்டும். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு, கடந்த ஆண்டு (2017) கூட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததன் காரணமாக, செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தேடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. தி.மு.க தலைவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க அவகாசம் கோரியது. 

இதையடுத்து, கடந்த 19-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் இல்லாத வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தை விடுத்து சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த தி.மு.க திட்டமிட்டிருந்தது. ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்ததால், பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகக் கடந்த 3-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், கருணாநிதி மறைவை அடுத்து பொதுக்குழுக் கூட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில், தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக தி.மு.க-வின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் வரும் 28.8.2018 அன்று காலை 9 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தணிக்கைக் குழு அறிக்கை, தலைவர், பொருளாளர் தேர்தல்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!