``ஊரே இருண்டு கிடக்குதுன்னு சொன்னாங்க” - நிவாரண நிதி வழங்கி நெகிழ வைத்த பார்வையற்றவர்கள்

பார்வையற்றவர்கள்

கேரளாவில் பெய்துவரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு, வெள்ளம் சூழ்ந்த நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரள மாநிலத்துக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். தமிழகத்தின் சினிமா நட்சத்திரங்கள், தமிழக முதல்வர், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர்.

குறிப்பாகத் தமிழக முதல்வர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 கோடி நிதி அறிவித்துள்ளார். மேலும், தமிழக மக்களிடமிருந்து பெறப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் கேரளா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அந்தவகையில் திருச்சி மாவட்டத்திலிருந்தும் கேரளா மாநிலத்துக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.  இந்த நிலையில், நேற்று (20-08-2018) திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் ராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரநாராயணன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது திருச்சி பார்வையற்றோர் குடியிருப்பு நலச்சங்கத்தின் சார்பாக  மாரிமுத்து தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட பார்வை இழந்தவர்கள், கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக ரூபாய் 10 ஆயிரம் நிதியுதவி மற்றும் ரூபாய் 20,000 மதிப்புள்ள போர்வை, சேலை, வேட்டி, கைலி, துண்டு போன்ற பொருள்கள் வழங்கினர்.

அப்போது மாவட்ட கலெக்டர்  ராசாமணி, ``பார்வையற்றவர்களின் உதவும் எண்ணம் மிகச்சிறப்பானது. இதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ளவர்கள் கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்பவர்கள் மாவட்ட நிர்வாகத்தைத் தொடர்பு கொள்ளலாம்" என அறிவித்துள்ளார்.

நம்மிடம் பேசிய பார்வையற்றவர்கள், ``கேரளாவில் பெய்யும் கன மழையால், அந்த ஊர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரொம்ப கஷ்டப்படுகிறார்களாம். ஊர் முழுக்க மின்சாரம் இல்லையாம். ஊரே இருண்டு கிடக்குது. இருட்டில் பிள்ளைகள் தவிக்கிறாங்களாம். இதை நண்பர்கள் எங்களிடம் சொன்னதும் தூக்கம் வரல. அதனால் சங்கத்து நிர்வாகிகள் முடிவெடுத்து, பணமும், பொருள்களும் சேகரித்து அதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தோம். எங்களைப் போல் மற்றவர்களும் உதவ வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர். பார்வையற்றவர்களின் மனித நேயமிக்க செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!