வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (21/08/2018)

கடைசி தொடர்பு:09:00 (21/08/2018)

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் தேர்தல்; முதல்வர் நாராயணசாமி ஆதரவாளர் அதிர்ச்சி தோல்வி

புதுச்சேரியில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் முதல்வர் நாராயணசாமி ஆதரவு வேட்பாளரை வீழ்த்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் நமச்சிவாயம் ஆதரவாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.

நாராயணசாமி

எதிர்வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கட்சியை வலுப்படுத்தும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பிரதேச இளைஞர் காங்கிரஸ் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த 18-ம் தேதி தொடங்கிய தேர்தல் நேற்று 19-ம் தேதி மாலை முடிவடைந்தது. இந்தத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட முத்தியால்பேட்டையைச் சேர்ந்த லட்சுமி காந்தன் என்பவரை முதல்வர் நாராயணசாமியும், வில்லியனூர் பூக்கடை ரமேஷ் என்பவரை புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயமும் ஆதரித்தனர். அதன்படி கடந்த 18-ம் தேதி 16 தொகுதிகளிலும், இரண்டாம் நாளான 19-ம் தேதி 14 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெற்று அனைத்து தொகுதி வாக்குப் பெட்டிகளும் புதுச்சேரி கம்பன் கலையரங்கம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நேற்று 20-ம் தேதி தொடங்கியது. பகல் 12 மணியளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் இருந்தே அமைச்சர் நமச்சிவாயத்தின் ஆதரவாளரான பூக்கடை ரமேஷ் முன்னிலையில் இருந்தார். அதேபோல் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ், பாகூர் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ தனவேலுவின் மகன் அஷோக் ஷிண்டே வெற்றி பெற்றனர். தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூக்கடை ரமேஷ் 6,709 வாக்குகளும் 2-வது இடம் பிடித்த லட்சுமி காந்தன் 4,067 வாக்குகளும் பெற்றனர். பொதுச்செயலர்கள் பதவியில் வெற்றி பெற்ற விக்னேஷ் 2,819 வாக்குகளும், அசோக் ஷிண்டே 2,201 வாக்குகள் பெற்றனர். வெற்றி பெற்றவர்களின் ஆதரவாளர்கள் கம்பன் கலையரங்கு வாசலில் பட்டாசு வெடித்து தங்கள் வெற்றியைக் கொண்டாடி காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயத்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க