``36 ஆயிரம் கோடி ஊழல்” மோடியை சாடும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

``ரபேல் ஒப்பந்தத்தை திருத்தி 36 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது” என பிரதமர் மோடி மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாராயணசாமி

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா புதுச்சேரி வைசியாள் வீதியிலுள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் நாராயணசாமி, ``மறைந்த நம் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில் நம்நாடு பொற்காலமாக திகழ்ந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக மனித வெடிகுண்டு தாக்குதலால் நாம் அவரை இழந்துவிட்டோம். மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி 10.18% உயர்ந்தது. ஆனால், மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்கு வருடத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி முன்பைவிட 6.7% குறைந்துள்ளது. அதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதோடு விவசாயிகளின் தற்கொலையும் அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி மீது வைக்கப்பட்ட போபர்ஸ் ஊழல் புகார் பொய் என்பது 14 வருடங்களுக்குப் பிறகு தற்போது நிரூபணம் ஆகியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடந்ததாகப் பொய்ப் புகார் கூறி ஆட்சிக்கு வந்த மோடி ஆட்சியில் ரபேல் விமானம் வாங்கியதில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.

மோடி

பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் விமானம் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் விமானம் ஒன்று 575 கோடி ரூபாய் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. 2015-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி பிரான்ஸ் நாட்டுக்குச் சென்று அந்த ஒப்பந்தத்தை திருத்தினார். ரபேல் விமானத்தின் விலை 1,651 கோடி ரூபாயாக தீர்மானிக்கப்பட்டது. விமானம் ஒன்றுக்கு 1,000 கோடி ரூபாய் என 36 விமானங்களுக்கு 36,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதற்காக நாட்டு மக்களிடம் மோடி பதில் சொல் வேண்டும். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பா.ஜ.க-வின் இந்த மிகப்பெரிய ஊழலை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். மோடி அரசின் ஊழலைக் கண்டித்து புதுச்சேரியில் மாநிலம், மாவட்டம், வட்டாரம்தோறும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை வழங்க காங்கிரஸ் உயர்மட்ட நிர்வாகிகள் செப்டம்பர் மாதம் புதுச்சேரி வர இருக்கின்றனர்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!