வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (21/08/2018)

கடைசி தொடர்பு:12:13 (21/08/2018)

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா ஆக.30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா, வரும் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறுகிறது. 

trichendur subramaniya swamy temple

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு ஆவணித் திருவிழா வரும் 30-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 10-ம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறுகிறது. 29-ம் தேதி மாலையில் யானை மீது கொடிப்பட்டம் ரதவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

கொடியேற்றத்தை முன்னிட்டு 30-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கொடிமரத்தில் கொடிப்பட்டம் ஏற்றப்பட்டு, கொடிமரத்துக்கு அபிஷேகம் மற்றும் விசேஷ தீபாராதனை நடைபெறுகிறது. திருவிழாவின் 5-ம் நாளான, வரும் செப்டம்பர் 3-ம் தேதி, இரவு 7.30 மணிக்கு சிவன் கோயிலில் குடவருவாயில் தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7-ம் நாள் திருவிழாவான, 5-ம் தேதி காலை 5.30 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் உருகுசட்ட சேவையும், 9-மணிக்கு சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்திலும், மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது.

8-ம் நாள் திருவிழாவான வரும் 6-ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளிச் சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சை சாத்தியிலும் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாள் திருவிழாவான வரும் 8-ம் தேதி  காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. 12-ம் நாள் திருவிழாவான வரும் செப்டம்பர் 10-ம் தேதியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. 12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழா நாள்களில் தினமும் சுவாமி – அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நடைபெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க