வெளியிடப்பட்ட நேரம்: 12:14 (21/08/2018)

கடைசி தொடர்பு:12:14 (21/08/2018)

சுதந்திரத்துக்கு உடல் நலம் சரியில்லை!- கால்வாயில் மீட்டெடுத்த துணை நடிகை கீதா கண்ணீர்

துணை நடிகை கீதாவுடன் சுதந்திரம்

வளசரவாக்கத்தில் கால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட சுதந்திரம் என்ற பச்சிளம் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்ற தகவல் கிடைத்ததும் துணை நடிகை கீதா கவலையடைந்துள்ளார். 

சுதந்திரதினத்தன்று சென்னை வளசரவாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் பிறந்து இரண்டு மணி நேரமான பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை துணை நடிகை கீதா மீட்டெடுத்ததோடு, சுதந்திரம் என்று பெயரிட்டார். கால்வாயில் நீண்ட நேரம் கிடந்ததால் சுதந்திரத்துக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார். 

இந்த நிலையில், கடந்த சில தினங்களாகச் சுதந்திரம், வாந்தி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் அளித்துவருகின்றனர். கால்வாயில் உள்ள கிருமி தோற்றுக்கள் காரணமாக வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர், நலமாக இருக்கிறார். தாய்ப்பால் வங்கியிலிருந்து தினமும் அவருக்கு பால் கொடுக்கப்படுவதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும், சுதந்திரத்தைப் பார்க்க மருத்துவமனையில் கூட்டம் அலைமோதின. இதனால் அவரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரை உயிரோடு காப்பாற்றிய துணை நடிகை கீதாவுக்கு மட்டும் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர் மட்டும் அடிக்கடி சுதந்திரத்தைப் பார்த்து நலம் விசாரித்துவருகிறார். 

கீதாவிடம் பேசினோம். ``சுதந்திரத்துக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டவுடன் வருத்தமாக இருக்கிறது. அவனுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்துவருகிறேன். அவனைப் பார்க்க இன்று மருத்துவமனைக்குச் செல்கிறேன்" என்று கண்ணீருடன் கூறினார். 

மருத்துவர்கள் கூறுகையில், ``சுதந்திரம், மற்ற குழந்தைகளைப் போல நலமாக இருக்கிறார். அவருக்குச் சில சிகிச்சை அளித்துவருகிறோம். விரைவில் பூரண குணமடைவார். அவரை நர்ஸ்கள், டாக்டர்கள் கவனித்துவருகின்றனர். தினமும் சுதந்திரத்தைப் பார்க்க பலர் வருகின்றனர். இதனால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாலும் பாதுகாப்புக் கருதி பார்வையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளோம்" என்றனர். 

வளசரவாக்கம் போலீஸாரிடம் கேட்டதற்கு, ``சுதந்திரத்தின் பெற்றோரைத் தேடிவருகிறோம். ஆனால், அவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை" என்றனர்.