வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (21/08/2018)

கடைசி தொடர்பு:13:10 (21/08/2018)

`கோயில் வரவு செலவுகளை ஆய்வு செய்யுங்கள்!'  - இ-பூஜா ஊழலால் உத்தரவிட்ட ஆணையர் ஜெயா

திருக்கோயில் வங்கிக் கணக்கில் இ-சேவை வரவுகள் விடுதல்கள் ஏற்பட்டும் காலதாமதமாகவும் ஒட்டுமொத்தமாகவும் வரவு வைக்கப்பட்ட விவரம் பழநி மண்டல தணிக்கை அலுவலரால் கண்டுபிடிக்கப்பட்டது.

`கோயில் வரவு செலவுகளை ஆய்வு செய்யுங்கள்!'  - இ-பூஜா ஊழலால் உத்தரவிட்ட ஆணையர் ஜெயா

றநிலையத்துறை அதிகாரிகளின் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறது இ-பூஜா திட்டத்தில் நடந்துள்ள குளறுபடிகள். ' தனியார் மென்பொருள் மூலம் இணையதளம் வாயிலாக சேவை வழங்கும் இ-சேவை பரிவர்த்தனைகளை தணிக்கை செய்து வருவாய் இழப்பு மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்பதை ஆய்வு செய்யுங்கள்' என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறார் ஆணையர் ஜெயா. 

தமிழகத்தில் உள்ள கோயில்களைப் பராமரிப்பது, நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகளை இந்து சமய அறநிலையத்துறை செய்து வருகிறது. இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் 36,500 கோயில்களும் 56 திருமடங்களும் வருகின்றன. தமிழகத்தில் உள்ள புராதனப் பெருமை வாய்ந்த கோயில்களுக்கு வரக் கூடிய வெளிநாட்டினர் அதிகம். மேலும், புராதனச் சின்னங்களைத் தரிசிக்கவும் அதிகளவில் வெளிநாட்டவர் வருகை தருகின்றனர். இதன்மூலம் வரக்கூடிய வருமானத்தை ஒருங்கிணைக்க நினைத்த அதிகாரிகள், இ-பூஜா திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தனர். இந்தத் திட்டத்தின்கீழ் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இ-பூஜா, இ-உண்டியல், இ-அன்னதானம் என அனைத்து வசதிகளையும் ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளும் வேலைகள் நடந்து வந்தன. இதற்கான பணிகளை தாராபுரத்தைச் சேர்ந்த 'ஐ ஸ்கை' என்ற நிறுவனம் எடுத்துச் செய்து வந்தது. இந்நிறுவனத்தின் கணக்கு வழக்குகளால் குழப்பத்தில் ஆழ்ந்த அதிகாரிகள், கடந்த மே மாதத்துடன் இந்த நிறுவனத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டனர். இதனால் கொதித்துப் போன நிறுவனத்தின் பிரதிநிதிகள், பல கோயில்களில் சர்வர்களின் செயல்பாட்டை முடக்கிப் போட்டுவிட்டதாகவும் 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது. சிலைத் திருட்டு விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக்கொண்ட அதிகாரிகளுக்கு இ-பூஜா திட்டம் கூடுதல் சங்கடத்தை அளித்தது. 

ஐ ஸ்கை நிறுவனம்

இந்நிலையில், அறநிலையத்துறையின் மண்டல தணிக்கை அலுவலர்கள், அனைத்துத் துணை தலைமை தணிக்கை அலுவலர்களுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார் ஆணையாளர் ஜெயா. அந்த உத்தரவில் உள்ளவை பின்வருமாறு: 

இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியத் திருக்கோயில்களில் இ-சேவை வாயிலாக காலபூஜை, விடுதி முன்பதிவு, தங்க ரதம், தங்க தொட்டில், சிறப்பு நுழைவுக் கட்டணம், இ-உண்டியல் மற்றும் இ-நன்கொடை போன்ற இணையதள சேவைகளுக்கு பக்தர்கள் இணையதள வழியாக தொகையை செலுத்தி சேவைகளை அனுபவித்து வருகின்றனர். இச்சேவைகளுக்குத் திருக்கோயில்கள், தனியார் நிறுவனங்களின் மூலம் மென்பொருள் சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சேவைகள் சம்பந்தமாக பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலின் பதலி 1426-க்கான தணிக்கையை மேலாய்வு செய்தபோது, திருக்கோயில் வங்கிக் கணக்கில் இ-சேவை வரவுகள் விடுதல்கள் ஏற்பட்டும் காலதாமதமாகவும் ஒட்டுமொத்தமாகவும் வரவு வைக்கப்பட்ட விவரம் பழநி மண்டல தணிக்கை அலுவலரால் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து முக்கிய திருக்கோயில்களிலும் இ-சேவை குறித்த வரவு செலவு பரிவர்த்தனை குறித்து தணிக்கை மேற்கொள்ளப் பார்வைக் குறிப்பின் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, தனியார் மென்பொருள் மூலம் இணையதளம் வாயிலாக சேவை வழங்கும் இ-சேவை பரிவர்த்தனைகளை பசலி 1426 மற்றும் பசலி 1427-க்கு (மே 2018 முடிய) தணிக்கை செய்து வருவாய் இழப்பு மற்றும் முறைகேடுகள் ஏதும் நடைபெற்றுள்ளதாக  என்பதை ஆய்வு செய்து அறிக்கையாக அனுப்பிட அனைத்து துணை தலைமை தணிக்கை, மண்டல தணிக்கை அலுவலர்களைக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

மேலும், மேற்பட திருக்கோயில்களில் தற்போது இ-சேவை வரவுகளுக்கு மென்பொருள் உரிய இலாகா அனுமதி பெற்று செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் இடைப்பட்ட காலமான 6/2018 முதல் நாளது தேதி வரை இ-சேவை பரிவர்த்தனைகளில் வரப்பெறும் தொகைகள் விடுதலின்றி திருக்கோயிலின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் தணிக்கையும் சரிபார்த்து அறிக்கையாக அனுப்பிவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பொருள் குறித்து அனைத்து சார்நிலை அலுவலர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி காலதாமதத்தை முற்றிலும் தவிர்த்து உடனடியாக விவரங்களை அனுப்பிடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது' எனக் குறிப்பிட்டிருக்கிறார்.