காவிரியை வேடிக்கை பார்த்த பெற்றோர்... செல்ஃபி எடுத்தபோது குழந்தைக்கு நடந்த விபரீதம் | Child died when father took selfie

வெளியிடப்பட்ட நேரம்: 14:04 (21/08/2018)

கடைசி தொடர்பு:14:04 (21/08/2018)

காவிரியை வேடிக்கை பார்த்த பெற்றோர்... செல்ஃபி எடுத்தபோது குழந்தைக்கு நடந்த விபரீதம்

காவிரி ஆற்றுப் பாலத்தின் மீது ஒருவர் தன் 4 வயது குழந்தையை வைத்து செல்ஃபி எடுக்கும்போது கை நழுவி குழந்தை ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. கணவன், மனைவி கண் முன்னே குழந்தை கதறி அழ, ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற காட்சி அனைவரையும் பதறி துடி துடிக்க வைத்தது.

காவிரி ஆற்றில் செல்ஃபி எடுத்தப்போது விபரீதம்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே காவிரி ஆற்றின் மீது தடுப்பணை இருக்கிறது. தற்போது இப்பகுதியில் சுமார் 2.50 லட்சம் கன அடி நீர் கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. வரலாறு காணாத இந்தத் தண்ணீரைக் காண ஆற்றுப் பாலத்தின் மீது மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து ரசிக்கிறார்கள். அந்த இடத்தில்தான் இன்று காலை 10 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

கரூர் எல்.ஜி.பி. நகரைச் சேர்ந்தவர் பாபு (39). அவரின் மனைவி ஷோபா (30). இவர்களுடைய 4 வயது குழந்தை தன்வந்த். சிறுவன் தன்வந்த் கரூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தான். தன்வந்த்துக்கு நேற்று பிறந்த நாள் என்பதால் வெளியில் அழைத்து செல்ல பாபு முடிவு செய்திருந்தார். ஆனால், பணியின் நிமித்தம் நேற்று வெளியில் செல்ல முடியவில்லை. இன்று காலை காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்வையிடுவதற்காக தன் மனைவி, குழந்தையை காரில் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

மோகனூர் ஆற்றுப் பாலம் 24-வது தூண் அருகே தன்வந்த்தைக் கையில் வைத்துக்கொண்டு செல்ஃபி எடுத்தபோது குழந்தை நழுவி ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. குழந்தை கதறி துடிக்க வெள்ளம் அடித்துச் சென்ற காட்சி அங்கு இருந்த அனைவரையும் பதறி துடிக்கச் செய்தது. தன்வந்த்தின் பெற்றோர் பேச முடியாமல் நிலை குலைந்து இருக்கிறார்கள்.

காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``செல்ஃபி எடுத்து குழந்தை விழவில்லை. தந்தை கையில் வைத்திருந்தபோது குழந்தை நழுவி கீழே விழுந்துவிட்டது'' என்கிறார்கள்.


[X] Close

[X] Close