வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (21/08/2018)

கடைசி தொடர்பு:19:36 (21/08/2018)

47 கல்லூரிகளில் பத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை... அதிர்ச்சியில் பொறியியல் கல்லூரிகள்!

நேற்றுடன் (20.08.2018) ஐந்து சுற்றுகளும் முடிவுற்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,59,632 பேர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1,09,850 பேர் மட்டுமே வந்தனர். 49,782 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கே வரவில்லை.

47 கல்லூரிகளில் பத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை... அதிர்ச்சியில் பொறியியல் கல்லூரிகள்!

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியே ஐந்து சுற்றுகளாக நடத்தி முடித்திருக்கிறது, அண்ணா பல்கலைக்கழகம். இதில், 47 பொறியியல் கல்லூரிகளில் பத்துக்கும் குறைவாகவும், 81 கல்லூரிகளில் 10 சதவிகிதத்துக்கும் குறைவாகவும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது.

பொறியியல் கல்லூரிகள் கலந்தாய்வு

பொறியியல் படிப்புக்கான பொதுக் கலந்தாய்வு, ஜூலை மாதம் 25-ம் தேதி ஆரம்பித்தது. மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வு வழியே நடப்பதால், ஐந்து சுற்றுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட கட் ஆஃப் மதிப்பெண் பெற்றவர்கள் மட்டும் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். 

பொறியியல் கல்லூரிகள்

நேற்றுடன் (20.08.2018) ஐந்து சுற்றுகளும் முடிவுற்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 1,59,632 பேர். இதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 1,09,850 பேர் மட்டுமே வந்தனர். 49,782 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கே வரவில்லை. இது விண்ணப்பித்தவர்களில் 31 சதவிகிதம் பேர். இறுதியாக, கலந்தாய்வுக்கு 1,07,000 பேர் மட்டுமே தகுதியுடையவர்களாக இருந்தனர். 

பொறியியல் கலந்தாய்வில் 509 கல்லூரிகளில் 1,70,628 இடங்களில் மாணவர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆரம்பத்திலேயே 22 கல்லூரிகள் கலந்தாய்விலிருந்து கழன்றுகொண்டன. மீதம் உள்ள 487 கல்லூரிகளில், 239 கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைவிட 30 சதவிகிதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன. அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (All India Council for Technical Education) குறைந்தபட்சம் 30 சதவிகிதம் அளவு மாணவர்கள் சேர்க்கை நடத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையில் குறிப்பிட்டிருப்பதால், குறைந்த சேர்க்கை உள்ள கல்லூரிகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் நடத்துவது கேள்விக்குறியாகியுள்ளது. 

பொறியியல் கல்லூரிகள்

இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு வழியாக 74,601 இடங்களே நிரம்பியுள்ளன. 96,000 இடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு 84,402 பேர் சேர்ந்துள்ள நிலையில், இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட 11,754 இடங்கள் நிரம்பவில்லை. இந்த ஆண்டில் 47 கல்லூரிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாகச் சேர்ந்துள்ளனர். ஒன்பது கல்லூரிகளில் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளனர். 81 கல்லூரிகளில் 10 சதவிகித இடங்கள்கூட நிரம்பவில்லை. 

பொறியியல் கலந்தாய்வு

இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியிடம் பேசியபோது, ``ஆன்லைன் கலந்தாய்வை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது அண்ணா பல்கலைக்கழகம். வெளிப்படைத்தன்மையுடனும், மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அலைச்சல் இல்லாமலும் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தியிருப்பதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வில் 42.58 சதவிகித இடங்களே நிரம்பியிருக்கின்றன. 58 சதவிகித இடங்கள் காலியாக உள்ளன. கலந்தாய்வில் 9 கல்லூரிகளில் ஒரே ஓர் இடம் மட்டுமே நிரம்பியுள்ளது. 27 கல்லூரிகளில் ஐந்து பேருக்கும் குறைவாகவும், 47 கல்லூரிகளில் பத்துப் பேருக்கும் குறைவாகவும், 150 கல்லூரிகளில் 50 பேருக்கும் குறைவாகவும், 268 கல்லூரிகளில் 100-க்கும் குறைவானவர்களே சேர்ந்துள்ளனர்" என்றார்.  

மாணவர் சேர்க்கை  கல்லூரிகளின் விவரங்கள்
1 மாணவர்  9 கல்லூரிகள்
5 மாணவர்கள் 27 கல்லூரிகள்
10 மாணவர்கள் 47 கல்லூரிகள்
50 மாணவர்கள் 150 கல்லூரிகள்
100 மாணவர்கள் 268 கல்லூரிகள்

இந்த கவுன்சலிங்கில் 10 கல்லூரிகளில் மட்டுமே அனைத்து இடங்களும் நிரம்பியுள்ளன. இவற்றில் ஒரே ஒரு சுயநிதிக் கல்லூரி. 43 கல்லூரிகள் 90 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. 136 கல்லூரிகளில் 50 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன. இவற்றில் 102 சுயநிதிக் கல்லூரிகள். 500 கல்லூரிகளில் 136 கல்லூரிகளில் மட்டுமே 50 சதவிகித இடங்கள் நிரம்பியுள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். 81 கல்லூரிகளில் 10 சதவிகிதத்துக்கும் குறைவான இடங்களே நிரம்பியுள்ளன.ஜெயபிரகாஷ் காந்தி பொறியியல் கல்லூரிகள் 

``கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி பாடங்களில் அதிகளவில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், சிவில் இன்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் அண்டு எலெக்ட்ரானிக்ஸ் பாடங்களில் மாணவர்கள் சேர்வது வெகுவாகக் குறைந்துள்ளது.

மாணவர்களின் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தையும், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, பொறியியல் கல்லூரியின் தரத்தையும் கட்டமைப்பையும் மாற்றி அமைத்து புதிய கொள்கை முடிவை எடுக்க வேண்டும். இவ்வாறு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்வரும் காலத்திலும் பொறியியல் கல்வி வளர்ச்சி பெறும். மாணவர்களுக்குத் தேவையான அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், மேற்படிப்புக்கு உதவும் வகையில் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கல்வி நிறுவனங்களே இனி தாக்குப்பிடிக்க முடியும்" என்றார் ஜெயபிரகாஷ் காந்தி.

கடந்த ஆண்டு 200 கட் ஆஃப் பெற்றவர்களுக்குக் கிடைத்த கல்லூரிகளில், இந்த ஆண்டு 175 கட் ஆஃப் பெற்றவர்களுக்கும், 180 கட் ஆஃப் என்று இருந்ததால் மட்டும் சேர முடியும் என்ற கல்லூரிகளில் 150 முதல் 130 கட் ஆஃப் பெற்றிருந்தால்கூட சேர முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 300 பொறியியல் கல்லூரிகளை மூட வேண்டும் என்ற பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். அது விரைவில் சாத்தியப்படும்போல் தெரிகிறது.


டிரெண்டிங் @ விகடன்