தண்ணீர் வீணாவதைத் தடுக்க கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் | Check Dams should be built across Kollidam to avoid water wastage Anbumani ramadoss

வெளியிடப்பட்ட நேரம்: 16:05 (21/08/2018)

கடைசி தொடர்பு:16:05 (21/08/2018)

தண்ணீர் வீணாவதைத் தடுக்க கொள்ளிடம் ஆற்றில் 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தஞ்சை, நாகை மாவடங்கள் வழியாகப் பாயும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. அங்கு வசித்த மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பா.மா.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், வெள்ளம் புகுந்த நாதல்படுகை, முதலைமேடு திட்டு உள்ளிட்ட கிராமங்களைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து பழையாறு கிராமத்தில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தைப் பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ``ஆண்டுதோறும் 170 டி.எம்.சி தண்ணீர் வீணாகக் கடலில் கலக்கிறது. தற்போது விநாடிக்கு 2.5 லட்சம் கன அடி வீதம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. இந்தத் தண்ணீர் வீணாகச் சென்று கடலில் கலக்கிறது.பாசனத்துக்கு முறையாகத் தண்ணீர் வந்து சேரவில்லை. வாய்க்கால்கள், குளங்களில் தண்ணீர் இல்லை. கொள்ளிடம் ஆற்றங்கரையையொட்டி உள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு வசிக்கும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கவில்லை. வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் திருச்சி முக்கொம்பிலிருந்து 10 கிலோமீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும். கொள்ளிடம் ஆறு சமவெளிப் பகுதியாக இருப்பதால் தடுப்பணை கட்ட முடியாது என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ள கருத்து ஏற்கத்தக்கதல்ல.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே, ஆதனுர்-குமரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதாக அறிவித்தார். இதன்மூலம் முதல் அமைச்சர் பழனிசாமியின் கருத்து ஜெயலலிதாவின் கருத்துக்கு முரணாக உள்ளது. டெல்டா மாவட்டங்களின் விவசாயப் பாசனத்துக்குத் தேவையான தண்ணீரை வாய்கால்களில் திறந்துவிடாமல் இருப்பதற்கு, பெட்ரோலிய மண்டலம் திட்டதுக்கு அரசு ஆதரவாக இருப்பதே காரணம்" என்று கூறினார்.

அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தபோது பா.ம.க மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பழனிசாமி, மாவட்டச் செயலாளர் அன்பழகன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் தியாகராஜன், சிவபாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.


[X] Close

[X] Close