வெளியிடப்பட்ட நேரம்: 16:06 (21/08/2018)

கடைசி தொடர்பு:17:12 (21/08/2018)

நிலம் கையகப்படுத்தும்போது உரிமையாளர்களை வெளியேற்றக் கூடாது - பசுமை வழிச்சாலை விவகாரத்தில் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும்போது நிலம் உரிமையாளர்களை அப்புறப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்

சேலம் முதல் சென்னை வரை 8 வழிச் சாலை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக நிலங்களைக் கையகப்படுத்தும் பணியில் மாநில அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு, விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். எனவே, 'நிலங்களைக் கையகப்படுத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'விவசாயிகளை மிரட்டி நிலங்கள் கையகப்படுத்தப்படவில்லை. அவர்கள், விரும்பித்தான் நிலத்தைத் தருகிறார்கள். நிலம் தர மறுக்கும் விவசாயிகளிடம் வருவாய்த் துறை அதிகாரிகள், திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார்கள்' என்று தெரிவித்தார். பூவுலகின் நண்பர்கள் சார்பில், விவசாயிகளிடம் காவல்துறையினர் மிரட்டி நிலத்தை அளக்கும் வீடியோ பதிவு காட்டப்பட்டது. அதைப் பார்த்த பிறகு, 'மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. எனவே, அடுத்த உத்தரவு வரும் வரை நிலம் கையகப்படுத்தும்போது, நில உரிமையாளர்களை வெளியேற்றக்கூடாது' உத்தரவிட்டுள்ளனர்.