வெளியிடப்பட்ட நேரம்: 17:37 (21/08/2018)

கடைசி தொடர்பு:17:37 (21/08/2018)

`ரூ.6 லட்சம் கொடுத்தும் பொருள் வரவில்லை’ - சென்னை கூரியர் ஊழியருக்கு வியாபாரி கொடுத்த அதிர்ச்சி

கடத்தல்

தன்னை ஏமாற்றிய கூரியர் நிறுவன ஊழியரை கடத்திய சென்னை வியாபாரி இருட்டு அறையில் 5 நாள்கள் அடைத்துவைத்து சித்ரவதை செய்துள்ளார். 

சென்னை பார்க்டவுன் பகுதியைச் சேர்ந்தவர் திலிப் சிங். இவர் சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். இவரைக் காணவில்லை என்று கூரியர் நிறுவனத்தின் உரிமையாளர் நவ்சத், யானைக்கவுனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரித்தபோது திலீப் சிங்கை, ஒருவர் அழைத்துச் சென்றது தெரியவந்தது. அவர் யார் என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியன், உடற்பயிற்சிக்குத் தேவையான பொருள்களை விற்கும் கடை நடத்திவருகிறார். இவர், சத்துபொருள்களைச் சப்ளை செய்யும் நிறுவனத்திடம் ஆன் லைன் மூலம்  ஆர்டர் கொடுத்தார். ஆர்டரின்பேரில் பொருள்கள் வால்டாக்ஸ் சாலையில் உள்ள கூரியர் நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டது. அதற்கு 6 லட்சம் ரூபாயைக் கொடுத்தால் பொருள்கள் சப்ளை செய்யப்படும் என்று கூரியர் நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் திலீப்சிங்கிடம் பாண்டியன் 6 லட்சம் ரூபாயைக் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்ற பிறகும் பொருள்கள் வரவில்லை. இதனால் திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் பாண்டியன் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, போலீஸார் இருதரப்பினரிடமும் விசாரித்து பேசி முடித்துள்ளனர். 

இந்தச் சமயத்தில்தான் திலீப்சிங்கை பாண்டியன் மற்றும் அவரின் கூட்டாளிகள் கடத்தியுள்ளனர். ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள இடத்தில் 5 நாள்கள் அவரை இருட்டு அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்துள்ளனர். பணத்தைத் திரும்ப கேட்டு அடித்து உதைத்துள்ளனர். யானைக்கவுனி போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு திலீப்சிங்கை மீட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடம் ஜெ.ஜெ.நகர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதி என்பதால் வழக்கு அங்கு மாற்றப்பட்டுள்ளது.

 கண்டுபிடித்தது எப்படி? 

 போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``திலீப்சிங்கை காணவில்லை என்று கூறியதும் அவரின் செல்போன் கால்ஹிஸ்டரியை ஆய்வு செய்தோம். அப்போது பாண்டியனுடன் அவர் பேசிய விவரம் தெரிந்தது. இதனால் பாண்டியனின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தோம். ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் அவரின் செல்போன் சிக்னல் காட்டியது. உடனே அங்கு சென்றபோது திலீப்சிங் இருட்டு அறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். அவரை மீட்டோம். அவரைக் கடத்திய பாண்டியன் மற்றும் அவரின் கூட்டாளிகளிடம் விசாரணை நடத்திவருகிறோம்" என்றார்.  

போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த பாண்டியன், காவல்துறையை நம்பாமல் தானே களத்தில் இறங்கியுள்ளார். திலீப்சிங்கை மிரட்டி பணத்தைப் பெற்றுவிடலாம் என்றுதான் அவரைக் கடத்தியுள்ளார். ஆனால், இப்போது போலீஸாரிடம் கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டார்.