வெளியிடப்பட்ட நேரம்: 17:55 (21/08/2018)

கடைசி தொடர்பு:17:55 (21/08/2018)

`வாக்கிங்’ சென்ற மேலாளருக்கு நடந்த அதிர்ச்சி! 

கத்தி

சென்னை வளசரவாக்கத்தில் வாக்கிங் சென்ற தனியார் நிறுவன மேலாளரை அ.தி.மு.க பிரமுகர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர், தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றுகிறார். இவர், தினமும் அந்தப் பகுதியில் உள்ள பூங்காவில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இவருக்கும் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் ஒருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று கந்தசாமி, நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க பிரமுகர் அவரைக் கத்தியால் குத்த முயன்றார். இதைக்கண்ட பெண்கள் அலறியடித்து ஓடினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீஸார் கந்தசாமியை மீட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க பிரமுகர் மீது கந்தசாமி புகார் கொடுத்துள்ளார். அப்போது, அ.தி.மு.க பிரமுகர் மிரட்டிய ஆடியோ ஒன்றையும் ஆதாரமாக கொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடந்துவருகிறது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``அ.தி.மு.க பிரமுகர் மீது எங்களிடம் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரித்துவருகிறோம். அ.தி.மு.க பிரமுகர், இதற்கு முன்பு வேறு ஒரு கட்சியில் இருந்தார். சமீபகாலமாகத்தான் அ.தி.மு.க-வில் சேர்ந்தார். மேலாளருக்கும் அ.தி.மு.க பிரமுகருக்கும் என்ன பிரச்னை என்று விசாரித்தால் முழு தகவல் தெரிந்துவிடும்" என்றனர்.