159 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்; கடை உரிமையாளர் கைது - போலீஸார் நடவடிக்கை

ராமேஸ்வரம் துறைமுகப் பகுதியில் சட்டத்துக்குப் புறம்பாக விற்கப்பட்டு வந்த குட்கா மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகளைத் துறைமுகப் போலீஸார் பறிமுதல் செய்தனர். 

ராமேஸ்வரத்தில் கைப்பற்றப்பட்ட குட்கா பாக்கெட்டுகள்

தமிழகத்தில் போதை தரும் வகையிலான பான் மசாலா, குட்கா போன்றவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகையப் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும் பல்வேறு நகர் பகுதிகளில் குட்கா விற்பனை தடையின்றி நடந்து வருகிறது. மேலும், கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இவை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அதிகாரிகளும் துணையாக இருந்து வருகின்றனர். ஏற்கெனவே குட்கா விவகாரத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயர் அதிகாரி உள்ளிட்டோர் இந்தச் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

இந்தநிலையில் இன்று ராமேஸ்வரம் என்.எஸ்.கே வீதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகத் துறைமுக காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து துறைமுகம் அருகே உள்ள கடை ஒன்றில் சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் 150 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருள்கள் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட இவற்றின் மதிப்பு 50,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து கடையின் உரிமையாளரான விஸ்வநாதன் என்பவரை கைது செய்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!