வெளியிடப்பட்ட நேரம்: 21:20 (21/08/2018)

கடைசி தொடர்பு:21:20 (21/08/2018)

கடலில் கலக்கும் தாமிரபரணி உபரி நீர் - செயற்பொறியாளர் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை மற்ற கண்மாய்களுக்குத் திருப்பிவிட உத்தரவிடக் கோரிய வழக்கில், தாமிரபரணி வடிகால் நீர்த் திட்டத்தின் செயற்பொறியாளரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அணை

நெல்லை மாவட்டம் பொதிகை மலைப் பகுதியில் உருவாகும் தாமிரபரணி ஆறு, நெல்லையைக் கடந்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் கடலில் கலக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் மற்றும் மருதூர் தடுப்பணைகளில் இருந்து 53 குளங்களுக்கு நீர் செல்கிறது. இவற்றின்மூலம், 46,107 ஏக்கர் நெல், வாழை பாசன வசதி பெறுகின்றன. தாமிரபரணி உபரி நீர், வருடத்துக்கு 20 டி.எம்.சி., தண்ணீர் புன்னக்காயல் கடலில் வீணாகக் கலக்கிறது. எனவே,   இந்த உபரி நீரைப் பழைய காயல் பகுதியில் தடுப்பணை  அமைத்து சேமிக்க வேண்டும் எனவும், நீரின்றி வறண்டு காணப்படும் கண்மாய்களுக்குத் திருப்பிவிட வேண்டும் எனவும் விவசாயிகள் பல முறை கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் வந்தனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 அணைகள் வேகமாக நிரம்பியதால், தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம், மருதூர் தடுப்பணைகள் நிரம்பி 3 டி.எம்.சி தண்ணீர் கடலில் கலந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடலில் சேரும் உபரி நீரை கண்மாய்களுக்குத் திருப்பிவிட வலியுறுத்தி, திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கங்கள், தனியார் அமைப்புகள் எனப் பலர் தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் கலக்கும் உபரி நீரை கண்மாய்களுக்குத் திருப்பிவிடுமாறு மனு அளித்த நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்று நீரை மற்ற பகுதிகளுக்குத்  திருப்பிவிட உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின், “தாமிரபரணி வடிகால் நீர்த் திட்டத்தின் செயற்பொறியாளரிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டு, வழக்கை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க