ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவருக்கு சம்மன் அனுப்பிய ஆணையம்!

தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது ஏற்பட்ட கலவரத்தைக் கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதுகுறித்து விசாரித்துவரும் ஆணையம், உயிரிழந்த ஒருவருக்கு சம்மன் அனுப்பிய விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

விசாரணை ஆணையம்

தூத்துக்குடியில், கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில், போலீஸார் முன்னெச்சரிக்கை செய்யாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

கிளாஸ்டன்அந்தச் சம்பவம்குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைத்தது. அந்த ஆணையத்தின் சார்பாக விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தூத்துக்குடியின் அப்போதைய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மட்டும் அல்லாமல், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், காயம் அடைந்தவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடுகுறித்து அறிந்தவர்கள் என ஆணையத்தின் தரப்பில் கருதப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணைக்கு அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் எந்த தினத்தில் எத்தனை மணிக்கு விசாரணை ஆணையம் முன்பாக ஆஜராக வேண்டும் என்பது பற்றிய விவரங்களுடன் சம்மன் அனுப்பப்பட்டுவருகிறது.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரில், தூத்துக்குடி திரேஸ்புரம்-மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கிளாஸ்டன் என்பவரும் ஒருவர். இவரது தந்தை கோயில்பிச்சை என்பவரின் பெயருக்கு அனுப்பப்படவேண்டிய சம்மனை, உயிரிழந்த கிளாஸ்டன் பெயரில் அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்மன் கடிதத்தின் புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவிவருகிறது. ஆணையத்தின்மூலம் சம்மன் அனுப்புவதில் இவ்வளவு அலட்சியமா? எனப் பல தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுவாக, ஒருநபர் ஆணையத்தின்மீது நம்பிக்கை இல்லை எனச் சொல்லிவருபவர்கள் மத்தியில், ஆணையத்தின் இச்செயல் மேலும் நம்பிக்கை இழக்கவைத்துள்ளது எனவும் குற்றம் சாட்டுகின்றனர். 

இதுகுறித்து அவர்கள் விசாரணை ஆணையத்துக்கு தெரியப்படுத்தியதால், ஆணைய ஊழியர்கள் தங்களின் தவறை உணர்ந்தனர். அதைத் தொடர்ந்து, 20-ம் தேதி அந்தச் சம்மனை திரும்பப் பெற்றுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்பினரும் பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!