வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (22/08/2018)

கடைசி தொடர்பு:07:02 (22/08/2018)

``அடுத்தாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் கரூர் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை!" - அமைச்சர் தகவல்

  மருத்துவக்கல்லூரி தொடர்பான ஆலோசனை

``கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணிகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிவடைந்து மாணவர்கள் சேர்க்கை தொடங்கும்" என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அரசு மருத்துவக்கல்லூரியின் அங்கீகாரம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட இதரப் பணிகள் தொடர்பாக டெல்லியிலிருந்து இந்திய மருத்துவக்கழக உறுப்பினர்கள் விரைவில் ஆய்வு மேற்கொள்ளவிருப்பதையொட்டி, அதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடர்பாகத் தமிழக மருத்துவக்கல்வி இயக்குநர் மற்றும் குழுவினருடான ஆய்வுக்கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் முன்னிலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும், மாணவர் சேர்க்கை குறித்தும், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேலும் கூடுதலாக தேவைப்படும் வசதிகள் குறித்தும் விரிவாக விவாதம் செய்யப்பட்டது.

இக்கூட்டத்துக்குப் பிறகு பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர், ``கரூரில் 800 படுக்கைகள் கொண்ட 150 மாணவ, மாணவிகள் பயிலக்கூடிய மருத்துவக்கல்லூரி கட்டுவதற்காக கடந்த 1.3.2018 அன்று பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து நடைபெற்று வருகிறது. ரூ.75.79 கோடி மதிப்பில் 3.20 லட்சம் சதுரஅடி பரப்பில் வகுப்பறைக் கட்டடங்களும், ரூ.122.79 கோடி மதிப்பில் 5.58 லட்சம் சதுரஅடி பரப்பில் மருத்துவமனைக் கட்டடங்களும், ரூ.71.01 கோடி மதிப்பில் 2.99 லட்சம் சதுரஅடி பரப்பில் மாணவ, மாணவியர்கள் தங்கும் விடுதிகளும் என ரூ.269.59 கோடி மதிப்பில் 11.78 லட்சம் சதுரஅடி பரப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த மருத்துவக்கல்லூரி நகரின் மையப்பகுதியான காந்திகிராமத்தில் 17.45 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியின் உள்கட்டமைப்புப் பணிகள் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக டெல்லியிலிருந்து இந்திய மருத்துவக்கழக உறுப்பினர்கள் விரைவில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். மருத்துவக்கல்லூரியில் தேவையான வசதிகளை ஏற்படுத்தவும் போதிய அளவு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பேராசியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தல், மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறைகள், கணினி உள்ளிட்ட இதர வசதிகள், தங்குமிடம் போன்ற மருத்துவக்கல்லூரிக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய வருகை தரவுள்ளனர். அதற்கான பணிகளை விரைந்து முடித்து ஒப்புதல் பெற்று 2019 செப்டம்பர் மாதம் மாணவர் சேர்க்கை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கும்" என்றார்.