வெளியிடப்பட்ட நேரம்: 02:15 (22/08/2018)

கடைசி தொடர்பு:07:13 (22/08/2018)

தி.மு.க நிர்வாகி கொலை வழக்கில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ்!

திமுக பிரமூகர் கொலை வழக்கு

தி.மு.க பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கினை சி.பி.ஐ க்கு மாற்றகோரிய வழக்கில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிப் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும், மு.க.அழகிரிக்கு நெருக்கமானவராக விளங்கியவர்  பொட்டுசுரேஷ் . கடந்த 2013 -ல் அவரின் வீட்டின் முன்பாகவே அவரை சரமாரியாக வெட்டிச்சாய்த்தனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அட்டாக் பாண்டியை சேர்த்தனர். இதில் தொடர்புடைய பலரைக் கைது செய்தனர். ஆனால், அட்டாக் பாண்டி தொடர்ந்து 2 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தார். பின்னர் 2015 -ம் ஆண்டு மும்பையில் அவரை போலீஸார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தனக்கு ஜாமீன் வழங்குமாறு தாக்கல் செய்த மனுக்களை 5-க்கும் மேற்பட்ட முறை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதன் வழக்கு விசாரணையில் நீதிபதிகள் இவ்வழக்கு குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி., சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. மற்றும் சி.பி.ஐ. இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி பதிலளிக்க  நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை செப்டம்பர்  6 -ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.