வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (22/08/2018)

கடைசி தொடர்பு:07:17 (22/08/2018)

``காவிரியில் மணல் அள்ளுவதால் 50 டி.எம்.சி தண்ணீரை சேமிக்க முடியவில்லை!" - முகிலன் குற்றச்சாட்டு

 

 நீதிமன்றம்

சிறையில் இருந்து கரூர் நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கு விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட காவிரி பாதுகாப்புக் குழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது மேலும் ஒரு வழக்கிற்காக காவல்துறை அவரை கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழக்குகளுக்காக முகிலனை 15 நாள்கள் சிறையில் அடைக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -2 நீதிபதி உத்தரவிட்டார்.

காவிரி பாதுகாப்புக் குழு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் மீது கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியது உள்ளிட்ட பல வழக்குகளில் கைது செய்து அவரை சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. இந்த நிலையில், கடந்த ஆண்டு கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சீத்தப்பட்டியில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்ற வழக்கிலும் கைது செய்யப்பட்டார். மேற்படி வழக்குகளில் கைது செய்யப்பட்டு முகிலன் கடந்த 338 நாள்களாக சிறையில் உள்ளார். இந்த நிலையில், நேற்று (21.08.2018) மதியம் கரூர் நீதிமன்ற விசாரணைக்காக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -2  ல் முகிலனை காவல்துறையினர் ஆஜர்படுத்தினார்கள்.

இதனிடையே கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் காவிரி ஆறு வாங்கல் பகுதியில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தனியார் மண்டபத்தில் அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பாக டிசம்பர் 13, 2016-ல் கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தி.மு.க-வின் விவசாய அணி மாநிலச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சின்னசாமி உள்பட 6 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, முகிலனை 15 நாள்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். முகிலனை காவல்துறையினர் கைது செய்து மதுரை மத்தியச் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.  நீதிமன்றத்துக்கு வெளியே போலீஸார் முகிலனை அழைத்துவந்தபோது தமிழக அரசுக்கு எதிராகவும் காவல்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்.


 முகிலன்

அதோடு, ``தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும். மணல் கொள்ளையை எதிர்த்து தொடர்ந்து நாம் போராட வேண்டும். தமிழகத்தில் காவிரியில் மணலை கணக்கு வழக்கில்லாமல் அள்ளியதால் சுமார் 50 டி.எம்.சி  தண்ணீரை சேமிக்க முடியாமல் வீணாக கடலில் விடப்பட்டுள்ளது. இதை அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்," என்றார். தமிழக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி முகிலன் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியதால் நீதிமன்ற வாளகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.